Monday, September 1, 2014

இன்ஜினீயரிங் கவுன்சிலிங்

ன்ஜினீயரிங் கவுன்சிலிங்! லட்சக் கணக்கான மாணவர்களின் எதிர்காலக் கனவை நனவாக்கும் முதல் புள்ளி. தரமான கல்வி கற்பித்து, சிறந்த வேலைவாய்ப்பி னையும் ஏற்படுத்திக் கொடுக்கும் பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணங்களில் சேர இன்ஜினீயரிங் கவுன்சிலிங்தான் ஒரே வாசல். நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், ப்ளஸ் டூ மதிப்பெண்கள் மட்டுமேதான் கவுன்சிலிங்கில் பரிசீலிக் கப்படும். ஜூன் 25 தொடங்கி, சென்னையில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நடக்கும் கவுன்சிலிங். ஏற்கெனவே விண்ணப்பித்திருப்பவர்கள்தான் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியும். கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளும் முன் மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர்.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 454 பொறியியல் கல்லூரிகளின் 1,82,000 இடங்கள் அரசால் நிரப்பப்படும். மீதம் உள்ள 74,000 இடங்களை மேனேஜ்மென்ட் கோட்டா அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தினர் நிரப்பிக்கொள்வார்கள். அரசால் நிரப்பப் படும் அந்த 1,82,000 இடங்களுக்குத்தான் இந்த கவுன்சிலிங் நடக்கவிருக்கிறது! கட் ஆஃப் மதிப்பெண்கள்!
ப்ளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் தான் ஒருவரது ரேங்க் நிர்ணயிக்கப்படுகிறது என்பதால், அதிக மதிப்பெண் பெற்றவர் களுக்கு கவுன்சிலிங்கின் முதல் நாளில் இருந்து அழைப்பு இருக்கும். ப்ளஸ் டூ தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களைத் தலா 200 மதிப் பெண்களுக்கு எழுதி இருப்பீர்கள். இதில் ஒரு மாணவர் கணிதத்தில் 200-க்கு எடுத்த மதிப்பெண்களை 100-க்குக் கணக்கிடுவார்கள். அதேபோல இயற்பியலில் 200-க்கு எடுத்த மதிப்பெண்களை 50-க்குக் கணக்கிடுவார்கள். வேதியியலுக்கும் இதே நிலை. ஆக, கணிதம் 100, இயற்பியல் மற்றும் வேதியியல் தலா 50 என மொத்தம் 200-க்குக் கணக்கிடப்படும் மதிப்பெண்கள்தான் அவரது கட் ஆஃப் மதிப்பெண்கள்!
'ரேண்டம் நம்பர்' என்றால் என்ன?
சரிசமமான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர் களுக்கு ரேங்க் நிர்ணயிப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வு காணத்தான் கவுன்சிலிங் விண்ணப்பத்தில் 'ரேண்டம் நம்பர்' (random number) என்ற ஒன்றைக் குறிப்பிட்டு இருப்பார்கள். கிட்டத் தட்ட ஒரு டோக்கன் போலத்தான் இந்த ரேண்டம் எண். இரண்டு மாணவர்கள் கட் ஆஃப் மதிப்பெண்களில் 200-க்கு 190 எடுத்திருக்கும் போது, அவர்கள் இருவருக்கும் ஒரே ரேங்க் தர முடியாது. அப்போது அவர்களில் யார் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்களோ, அவருக்கு அதிகப்பட்ச ரேங்க் வழங்குவார்கள். இருவரும் கணிதத்தில் நூற்றுக்கு நூறோ அல்லது அதிலும் ஒரே மதிப்பெண்கள் எடுத்திருந்தால், இயற்பியலில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாரோ அவருக்கு முன்னுரிமை அளிப்பார்கள். அதிலும் ஒரே மதிப்பெண் சிக்கல் இருந்தால், வேதியியல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த மூன்று பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அடுத்து அவர்களின் பிறந்த தேதியைக் கணக்கில்கொள்வார்கள். அதில் யார் மூத்தவரோ, அவருக்கு முன்னுரிமை. இருவரும் ஒரே தேதி, ஒரே வருடத்தில் பிறந்திருந்தால், அப்போதுதான் இந்த ரேண்டம் நம்பருக்கு வேலை வரும். இருவருக்கும் வழங்கப்பட்ட ரேண்டம் நம்பரில் எவருடையது குறைந்த மதிப்பு உள்ளதோ, அவருக்கு ரேங்கில் முன்னுரிமை தரப்படும். தவிர்க்கவே முடியாத சூழலில்தான் இந்த ரேண்டம் நம்பர் பயன்பாட்டுக்கு வரும். இதனால், நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது!
கவனத்தில்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்...
கவுன்சிலிங்கில் ஒரு முறை கல்லூரியையும், பாடப் பிரிவையும் தேர்வு செய்துவிட்டால், அதுவே இறுதியானது. மாற்ற இயலாது.
தவிர்க்க இயலாத காரணங்களால் கவுன்சிலிங்குக்கு வர முடியாத மாணவர்களுக்குப் பதிலாக, அவர்களின் பெற்றோர் கலந்துகொள்ளலாம். அந்தச் சமயத்தில் பெற்றோர் எடுக்கும் முடிவே இறுதியானது.
கவுன்சிலிங்கில் நீங்கள் ஏதேனும் ஒரு கல்லூரியைத் தேர்வு செய்துவிட்டால், உடனடியாக 5,000 ரூபாய் டெபாசிட்டாகக் கட்ட வேண்டிஇருக்கும். எஸ்.சி., எஸ்.டி பிரிவு மாணவர்களுக்கு இது 1,000 ரூபாய் மட்டுமே!
கவுன்சிலிங்கின்போது தேர்வு செய்த கல்லூரியில் சேராத மாணவர் முதலில் செலுத்திய டெபாசிட் பணத்தைத் திருப்பிக் கேட்கலாம். அப்போது கவுன்சிலிங் சமயத்தில் டெபாசிட் தொகை செலுத்தியதற்கான ரசீதை 31.10.2010-க்குள் ஒப்படைத்தால் 80 சதவிகிதத் தொகை திருப்பி அளிக்கப்படும்!
மறுகூட்டலுக்குப் பிறகு புதிய மதிப்பெண்கள், புதிய ரேங்க் பெற்றிருந்தால், பழைய மதிப்பெண்ணுக்குக் கொடுத்த தேதி மாறி இருந்தாலும் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளலாம்!
கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
முறையான அங்கீகாரம்!
காற்றோட்டமான வகுப்பறைகள், நல்ல முறையில் இயங்கும் பரிசோதனைக் கூடங்கள், நூலகங்கள், விடுதி வசதிகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற அடிப்படைக் கட்டுமானங்கள் நல்ல முறையில் இருக்கின்றனவா எனக் கவனித்தல்.
பேராசிரியர்களின் படிப்பு, அனுபவம் ஆகியவை.
கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் போக்குவரத்து வசதிகள், மருத்துவமனைகள் போன்றவை.
படிப்பு முடிந்ததும் சிறந்த ப்ளேஸ்மென்ட் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றனவா என ஆராய்தல்.
பிடித்த பாடத்தை, பிடித்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். பல சமயங்களில் பிடித்த பாடம் கிடைக்கும். ஆனால், விரும்பிய கல்லூரியாக இருக்காது. இல்லையென்றால், விரும்பிய கல்லூரி கிடைக்கும். ஆனால், பிடித்த பாடத்தில் இடம் கிடைக்காது. இதுபோன்ற சமயத்தில், எது நமக்குக் கிடைக்கிறதோ அதை நாம் விரும்பிப் படிக்க வேண்டும்.
நான்கு ஆண்டுகள் கடினமாக உழைத்துப் படித்தால், 40 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம். ஆகவே, என்ன பாடம், எந்தக் கல்லூரியில் கிடைத்தாலும், அதை விரும்பிப் படியுங்கள். மாணவர்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம், சிறந்த முறையில் அடிப்படை வசதிகள்கொண்ட கல்லூரியாக இருக்கிறதா என்பதுதான்!
சில கேள்விகள்... சில விளக்கங்கள்!
"கவுன்சிலிங் மூலம் கல்லூரியில் சேர்ந்த பிறகு, அங்கு போதிய வசதிகள், தரமான கல்வி அனுபவங்கள் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?"
"முதல் வருடம் அந்தக் கல்லூரியில் படித்துவிட்டு மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு இரண்டாவது வருடப் படிப்பை வேறு ஒரு கல்லூரியில் தொடரலாம்!"
"ப்ளஸ் டூ தேர்வில் ஃபெயில் ஆகி உடனடிச் சிறப்புத் தேர்வு எழுதியவர்கள், தக்க மதிப்பெண்கள் இருந்தால் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியுமா?"
"முடியும். அவர்களுக்கென்று தனியாக 'சப்ளிமென்ட்டரி கவுன்சிலிங்' நடக்கும். அதைப்பற்றிய விவரங்கள் நாளிதழ்களில் வெளியாகும்!"
"வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள பெற்றோருடன் வரும் மாணவர்களுக்கு அரசு ஏதேனும் பயணப் படிகள் தருகின்றனவா?"
"வெளியூர்களில் இருந்து கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள சென்னை வரும் மாணவர் மற்றும் அவருக்குத் துணையாக வரும் ஒருவருக்கு பேருந்து அல்லது ரயில் கட்டணத்தில் 50 சதவிகிதச் சலுகை அளிக்கப்படும். இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடமோ அல்லது ரயில் டிக்கெட் முன் பதிவின்போதோ காண்பிக்க வேண்டும்!"
"தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட தேதியில் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியாதவர்கள் அடுத்து வரும் நாட்களில் கலந்துகொள்ள முடியுமா?"
"கலந்துகொள்ளலாம். ஆனால், அவர்களுக்கு வழங்கப்பட்ட ரேங்க் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நாளைத் தவறவிட்டதால், அடுத்து வரும் நாளில் எந்தக் கல்லூரியில், என்ன படிப்பு இருக்கிறதோ, அதில் ஏதாவது ஒன்றைத்தான் தேர்வு செய்ய முடியும்!"

டாப்- 5 பொறியியல் படிப்புகள்!
வேலைவாய்ப்பு, சம்பளம், எதிர்கால வளர்ச்சி எனப் பல கோணங்களில் மாணவர்களிடையே 'மோஸ்ட் வான்டட்' பொறியியல் படிப்புகள் அந்தஸ்துடன் இருக்கும் டாப்-5 கோர்ஸ்கள் இவை!
மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்
இயந்திரங்களோடு பணியாற்றக் கற்றுத்தரும் படிப்பு. பெரிய தொழிற்சாலைகள், இயந்திர ஆலைகள், இரும்பு ஆலைகள் போன்ற உற்பத்தி மற்றும் நாட்டின் அடிப்படைக் கட்டுமானத்துடன் தொடர்புடைய பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு நிச்சயம். எந்த ஒரு பொருள் கையில் கிடைத்தாலும், அதைப் பிரித்து அக்குவேறு, ஆணிவேறாக ஆராய் வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால், நீங்கள் 'டிக்' அடிக்க வேண்டியது இந்தப் படிப்பைத்தான்.
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்
உங்களுக்கு மின்சாரம், மின்னணு போன்ற பொருட்களை ஆராய்ந்து அதன் மூலம் புதிதாக ஒரு எலெக்ட்ரானிக் சாதனத்தை உருவாக்கும் ஆர்வம் இருந்தால், இந்தப் படிப்பு உங்களுக்கு ஏற்றது. மின் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனம், ராணுவம் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. எவர்கிரீன் படிப்பாக இதற்கு மாணவர்களிடத்தில் எப்போதும் சிவப்புக் கம்பள வரவேற்பு!
எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங்
மின் இயந்திரங்களைக்கொண்டு தொடர்புகொள்ளும் அறிவியலைக் கற்றுத் தருகிற பாடம். தகவல் தொடர்பு உள்ளிட்ட வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கும் படிப்பு இது!
கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங்
உலகத்தைச் சுருக்கிவிட்ட கணினியைப்பற்றி எந்த அறிமுகமும் தேவை இல்லை. எந்தத் துறையிலும் கணினி பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத இன்றைய சூழலில் வேலைவாய்ப்புகள் ஹார்டுவேர், சாஃப்ட்வேர், புரொகிராமர் என நீள்கிறது பட்டியல்!
இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி
தகவல் தொடர்பும், மென்பொருள் ஏற்றுமதியும் ஏகமாக அதிகரித்து வரும் இந்நாளில், இந்தப் படிப்புக்கு நிச்சய வேலைவாய்ப்பு உண்டு. பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் இந்தியாவில் கோலோச்சி வருவதால், கையும் பையும் நிறையச் சம்பளம் என்ப தால், இதற்குத் தனி மவுசு!
இந்தப் பட்டியலில் தொடர்ந்து சிவில் இன்ஜினீயரிங், புரொடக்ஷன் இன்ஜினீயரிங், இன்ஸ்ட்ரூமென்ட் இன்ஜினீயரிங், என்விரான்மென்டல் இன்ஜினீயரிங், கெமிக்கல் இன்ஜினீயரிங் ஆகியவை இடம் பிடிக்கின்றன


Wednesday, April 30, 2014

வேளாண் பல்கலை: 2014 - 15 கல்வி ஆண்டு இளங்கலை படிப்புக்கு சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மே 12-ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் (2014-15) இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு மே 2-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். இளங்கலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மே 12-ஆம் தேதிமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
உறுப்புக் கல்லூரிகளில் 1,040 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 780 இடங்களும் என மொத்தம் 1,820 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர முறையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். இக்கல்வியாண்டில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதன்படி
வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதளத்திற்குச் சென்று (www.tnau.ac.in/admission.html) விண்ணப்பத்தை அத்தளத்திலேயே பூர்த்தி செய்து, பதிவு செய்ய வேண்டும்.
சிறப்பு இட ஒதுக்கீடுகளுக்கான முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுதாரர், விளையாட்டு வீரர்கள் பிரிவில் விண்ணப்பிப்போர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவு செய்தபின், விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.600, எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.300-ஐ கிரடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம்.
இந்த வசதி இல்லாதவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வங்கி ரசீது (செலான்) மூலம் எந்தவொரு ஸ்டேட் வங்கி கிளையிலும் கட்டணத்தைச் செலுத்தலாம்.
உத்தேச மாணவர் சேர்க்கை விவரம்
1. இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கை விவரம் பத்திரிகைகளில் வெளியீடு- மே 2 முதல் மே 12-ஆம் தேதிக்குள்.
2. இணையதள விண்ணப்பம் துவங்கும் நாள் - மே 12.
3. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பெற கடைசி நாள் - ஜூன் 7.
4. தரவரிசை பட்டியல் வெளியீடு - ஜூன் 16.
5. முதல்கட்ட கலந்தாய்வு (பொதுப் பிரிவு), சிறப்பு ஒதுக்கீடு, தொழில் கல்விக்கான கலந்தாய்வு - ஜூன் 30 முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை.
6. இரண்டாம் கட்ட கலந்தாய்வு - ஜூலை 14 முதல் 17-ஆம் தேதி வரை.
7. கல்லூரி வகுப்புகள் துவக்கம் - ஜூலை 25.
மேலும் விவரங்களுக்கு 0422-6611345, 6611346. இணையதள முகவரி: www.tnau.ac.in/admission.html

Sunday, April 13, 2014

ஜிமேட் தேர்வில் வெற்றி பெற வழிமுறைகள்

தி கிராஜுவேட் மேனேஜ்மென்ட் அட்மிசன் கவுன்சில் (ஜி.எம்.ஏ.சி) என்ற அமைப்பால், ஜிமேட் தேர்வு நிர்வகித்து நடத்தப்படுகிறது. இந்த கவுன்சில், உலகளாவிய அளவில், வணிகப் பள்ளிகளின் ஒரு லாப நோக்கமற்ற அமைப்பு ஆகும்.

இத்தேர்வின் மதிப்பெண்கள், சுமார் 110 நாடுகளில் அங்கீகரிக்கப்படுகின்றன. ஜிமேட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட பல்கலைகளில் 5400க்கும் மேற்பட்ட படிப்புகளில் சேர்க்கை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஜிமேட் தேர்வானது, நம்பத் தகுந்த ஒன்றாக கல்வி நிறுவனங்களால் பார்க்கப்படுகிறது. மேலும், ஜிமேட் மதிப்பெண்கள் தொடர்பாக, 'ஜிஎம்ஏசி' அமைப்பு 'வேலிடிட்டி ஸ்டடிஸ்' நடத்துகிறது.

உலகம் முழுவதுமுள்ள பல்வேறான மையங்களில் ஜிமேட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் 5 முறைகள் இந்த தேர்வை ஒருவர் எழுதலாம். மேலும், ஒரு தேர்வு முடிந்து அடுத்த தேர்வை எழுதும் காலத்திற்கு குறைந்த பட்சம் 31 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் 5 ஆண்டு வரை செல்லத்தக்கவை.

தேர்வு:

ஜிமேட் தேர்வில் 4 பிரிவுகள் உள்ளன. Analytical Writing Assessment, Integrated reasoning, quantitative and verbal ஆகும். இத்தேர்வில், கடந்த 2012ம் ஆண்டு Integrated reasoning என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய முறைகள் மற்றும் பலவித மூலங்களில் இருந்து கொடுக்கப்படும் தரவுகளை மதிப்பிடும் ஆற்றல் ஒரு மாணவருக்கு இருக்கிறதா என்பதை சோதித்து அறியும் வகையில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

குவாண்டிடேடிவ்:

தேர்வு எழுதுவோர் Arithmetic elementary algebra and concepts of geometry ஆகிய துறைகளில் பெற்றுள்ள அறிவை சோதிப்பது இப்பகுதியின் நோக்கம். மேலும், இரண்டு வகையான குவாண்டிடேடிவ் கேள்விகள் இப்பகுதியில் உள்ளன. problem solving மற்றும் data sufficiency போன்றவை அந்த 2 பிரிவுகள். 

problem solving கேள்விகள், ஒருவரின் மதிப்பாய்வு மற்றும் சிக்கல் தீர்க்கும் திறனை சோதிக்கின்றன. அதேசமயம், data sufficiency கேள்விகள் ஒரு குவாண்டிடேடிவ் சிக்கலை எவ்வாறு ஒருவர் பகுப்பாய்வு செய்கிறார் என்பதை மதிப்பிடுகிறது. மேலும், தொடர்புடைய டேட்டாவை அடையாளம் காண்பதில் உங்களின் திறன் மற்றும் சிக்கலை சரிசெய்யும் அளவிற்கு உங்களிடம் போதுமான தரவு இருக்கிறதா என்பதையும் இத்தகைய கேள்விகள் சோதிக்கின்றன.

வெர்பல்:

எழுதப்பட்ட விஷயத்தை படித்தல் மற்றும் புரிந்து கொள்ளுதல், விவாதங்களை மதிப்பிடல் மற்றும் எழுதப்பட்டவற்றை சரிபார்த்தல் போன்ற திறன்கள் இப்பகுதியில் சோதிக்கப்படுகின்றன. இப்பகுதியின் கேள்விகள் reading, comprehension, critical reasoning, sentence correction ஆகியவற்றில் இருந்து இடம் பெறும்.

இன்டக்ரேட்டட் ரீசனிங்:

பலவிதமான மூலங்களில் இருந்து வரும் தரவுகளை வைத்து பணிபுரியும் ஆற்றல் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை சோதிக்கவே, இந்த பகுதி கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பிரிவில் வெவ்வேறு வடிவங்களில் மொத்தம் 12 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். graphic interpretation, two part analysis, table analysis and multi source reasoning போன்றவை அவற்றுள் சில.

Analytical writing மதிப்பீடு:

ஒரு விவாதத்தை பகுப்பாய்வு செய்யும் இப்பகுதியானது, 30 நிமிடங்கள் நீடிக்கும். இப்பிரிவில் ஒருவர், கொடுக்கப்பட்ட ஒரு விஷயத்தில் பொதிந்திருக்கும் அம்சத்தை பகுப்பாய்வு செய்வதோடு அதைப்பற்றி எழுதவும் வேண்டும். 

quantitative மற்றும் verbal பிரிவுகள், computer adaptive முறையிலானவை. இப்பிரிவுகளில், நீங்கள் பதிலளித்த கேள்விகளின் எண்ணிக்கை, அதன் கடினத்தன்மை மற்றும் நீங்கள் பதிலளித்த கேள்விகள், இதர தன்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். நீங்கள் அதிக கேள்விகளுக்கு பதிலளித்தால், அதிக மதிப்பெண்களை பெறுவீர்கள்.

மேற்கூறிய இரு பிரிவுகளை தவிர்த்து integrated reasoning (IR) மற்றும் Analytical Writing Assessment (AWA) ஆகிய பிரிவுகளுக்கு தனித்து மதிப்பெண்கள் வழங்கப்படும். IR மற்றும் AWA ஆகிய பிரிவுகளின் மீதான உங்களின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த ஜிமேட் மதிப்பெண்களோடு இணைக்கப்படாது.

இந்திய கல்வி நிறுவனங்களும், ஜிமேட் தேர்வும்:

சுமார் 150க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்கும் இந்தியாவின் 80க்கும் மேற்பட்ட மேலாண்மை கல்வி நிறுவனங்கள், ஜிமேட் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன. பிரத்யேகமாக 5 மேலாண்மை கல்வி நிறுவனங்களில், 5 படிப்புகளுக்கு ஜிமேட் ஜிமேட் மூலமாக மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அவை, pgp; isp, hyderabad, pgpex; iim, calcutta, pgpx' iim, ahmedabad, ipmx; iim, lucknow, epgp; iim, bangalore இவை தவிர வேறு சில முக்கிய இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களும், ஜிமேட் மதிப்பெண்களின் மூலமாக மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. 

அவை, iims of indore, kozhikondu, shilong, udaipur, ranchi, trichy, raipur, xlri.jamshedpur, spjimr, mumbai, imt of ghaziabad, hyderabad, nagpur. 

தேர்வுக்கு தயாராதல் :

ஜிமேட் தேர்வுக்கு, அவசர கதியில் தயாராதல் தவறு. ஒருவேளை, உங்களின் நண்பர்களில் சிலர் இந்த தவறை செய்தாலும், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எந்த மேலாண்மை கல்வி நிறுவனத்தில் சேர உள்ளீர்கள் என்பதை முடிவு செய்து கொண்டு, அந்த கல்வி நிறுவனம் ஜிமேட் தேர்வின் எந்தப் பிரிவு மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அறிந்து வைத்து, அதற்கேற்ப நமது தயாராதலை மேற்கொள்ள வேண்டும்.
மொத்த மதிப்பெண்கள் அல்லது perfect மதிப்பெண்கள் என்பதைப் பற்றி எந்த தீர்மானமும் வைத்துக் கொள்ள தேவையில்லை. ஏனெனில், வணிகப் பள்ளிகள், பொதுவாக அவற்றுக்கு முக்கியத்தவம் தருவதில்லை. எனவே, ஒரு சிறப்பான target ஐ நிர்ணயம் செய்து அதற்கேற்ப இயங்கவும்.

மாதிரி தேர்வுகளை எழுதி, அதன் மூலம் நமது பலம் மற்றும் பலவீனங்களை அறியவும். ஜிமேட் தயாராலுக்கான ஒரு விரிவான திட்டத்தை தயார் செய்து, அதற்கேற்ப தவறாமல் செயல்படவும். அதேசமயம், மிகவும் ஒரு கடினமான மனோநிலையில் இருத்தல் நல்லதல்ல. ஏனெனில், நாம் படிப்பதை நாமே அனுபவித்து படித்தால் தான் நீண்ட கால பயனை நாம் அனுபவிக்க முடியும்.

ஜிமேட் தேர்வு முறை:

analytical writing assessment 30 1 analysis of an argiment 0 to 6, integrated reasoning 30 12 multi source reasoning, table analysis, graphic interpretation, two part analysis 1 to 8 (விரும்பினால் 8 நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ளலாம்)

quantitative 75 37 data sufficiency, problem solving 0 to 60 60 (விரும்பினால் 8 நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ளலாம்)

verbal 75 41 reading comprehension, critical reasoning, sentence correction 0 to 60 . ஒட்டு மொத்த கால அளவு & 3.30 மணி நேரங்கள்.

Tuesday, March 11, 2014

யாருக்கு மருத்துவ இடம்? -

யாருக்கு மருத்துவ இடம்? - ஜெயப்பிரகாஷ் காந்தி ஆலோசனை


மருத்துவப் படிப்பை கனவாய் கொண்டிருக்கும் மாணவர்கள், அதற்கு இப்போதே திட்டமிடத் துவங்க வேண்டும். பள்ளி மேல்நிலையில் பயாலஜி பிரிவில் பயிலும் மாணவர்களின் மதிப்பெண் வேட்டை, 2010ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2011ம் ஆண்டு பிரமாதமாக இருந்தது. 2010ம் ஆண்டில், மருத்துவப் படிப்பின் முக்கியப் பாடங்களான இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய 3 பாடங்களிலும் சதமடித்தவர்கள் மொத்தமே 14 பேர்தான். ஆனால் அந்த எண்ணிக்கை 2011ம் ஆண்டில் 65 என்ற அளவில் அதிகரித்தது.
உயிரியல் பாடத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், 2010ம் ஆண்டில், 200 மதிப்பெண் பெற்றவர்கள் 258 பேர். ஆனால் 2011ம் ஆண்டில் 615பேர் முழு மதிப்பெண் பெற்றனர். மருத்துவத் துறையில் நுழைவதை பலர் கெளரவமான விஷயமாக கருதுவதால், உயிரியல் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
மேலும், கட்-ஆப் மதிப்பெண் என்று பார்த்தால், 2010ல், 435 மாணவர்கள், 195/200 பெற்றார்கள். ஆனால் 2011ல், 1718 மாணவர்கள் 198/200 பெற்றார்கள். இதனால் 2011ம் ஆண்டில் மருத்துவ கட்-ஆப் 2 மதிப்பெண்கள் கூடிவிட்டது. அரசு மருத்துவக் கல்லூரிகளில். 2011ம் ஆண்டுக்கான மருத்துவ கட்-ஆப் மதிப்பெண்கள் எப்படி இருந்தன என்ற விபரத்தை மீண்டும் ஒருமுறை பார்ப்போம்,
இன வாரியாக,
OC - 199  BC - 197.75 BCM - 196.5 MBC - 196.25  SC - 192  SCA - 188.25  ST - 180.25
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் மொத்த இடமே வெறும் 1653தான் என்ற நிலையில், போட்டி எவ்வாறு இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். முற்பட்ட பிரிவுகளிலிருந்து(OC) வரும் மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்பெற,  கட்-ஆப் 199+/200 எடுத்திருக்க வேண்டும். பிற்பட்ட வகுப்பு மாணவர்கள்(BC), 198/200 எடுத்திருக்க வேண்டும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் 196+/200ம், தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்கள்(SC) 192+/200ம் எடுத்திருக்க வேண்டும்.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கட்-ஆப் மதிப்பெண்களும் மிக அதிகமாகவே இருக்கிறது. 2011ம் ஆண்டில், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இருந்த கட்-ஆப் விவரங்களை தற்போது மீண்டும் பார்ப்போம்,
OC - 196.5  BC - 195.75  MBC - 193.75  SC - 186  SCA - 174.25
ஒரு ஆச்சர்யகரமான அம்சம் என்னவென்றால், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், பல் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்து காணப்பட்டது. அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில், BDS படிப்பிற்கான கட்-ஆப் மதிப்பெண்கள் 2011ல் அதிகரித்தாலும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் கட்-ஆப் மதிப்பெண் குறைந்தது, பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த விவரங்களைப் பார்ப்போம்,
OC - 182.5  BC - 175  MBC - 159.75  SC - 157.75  SCA - 99.5  ST - 93

Sunday, February 2, 2014

வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கும் இ-பப்ளிஷிங்


அரசு வேலைவாய்ப்புக்கு இருக்கும் மவுசைப் போலவே தனியார் வேலைவாய்ப்புக்கும் தற்போது மவுசு கூடியிருக்கிறது. கொடுக்கும் சம்பளமும் மற்றும் இதர வசதிகளும்தான் தனியார் வேலைவாய்ப்புக்கு மாணவர்கள் சுண்டி இழுக்கிறது.
தற்போது பொயியியல் படிப்பில் பல்வேறு பிரிவுகளில் படித்து வெளிவரும் மாணவர்கள் பெரிதும் விரும்புவது பிபிஓ. வேலை மற்றும் ஐ.டி வேலைகளைத்தான். கஷ்டப்பட்டு வேலை பார்ப்பதைத் தான் இன்றைய தலைமுறையினர் விரும்புகிறார்கள் என்பதற்கு ஐ.டி பணியில் சேரும் இணைஞர்களின் எண்ணிக்கைதான் சாட்சி.
பொறியியல் படிப்பு படித்திருந்தால் மட்டும் தான் தனியார் பணியில் கொடிக்கட்டி பறக்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2, ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப் படிப்பு போன்ற குறைந்தபட்ச படிப்பு படித்திருந்தாலே போதும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேர முடியும். அந்த வகையில் இந்த இ-பப்ளிஷிங் துறைப் பற்றியும், அதில் குவிந்து கிடக்கும் வேலை வாய்ப்பு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
வளர்ந்த நாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்கள், இந்தியா போன்று பல்வேறு பணி வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த வகையில் பி.பி.ஓ.வும், கே.பி.ஓ.வும் இந்திய இளைஞர்களுக்கு பல்வேறு பணி வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
BPO எனப்படும் (Business Process Outsource) என்பது வர்த்தக அயல்நாட்டு பணி என்றும் KPO (Knowledge Process Outsource) என்பதை அறிவுசார் அயலக பணி என்றும் சொல்கிறோம்.
பி.பி.ஓ மூலமாக அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து போன்று உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆன்லைன் வழியாக பல்வேறு பணிகள் இந்தியாவுக்கு வருகின்றன. ஆன்லைனில் வரும் பணியை பதிவிறக்கம் செய்து, கொடுக்கப்பட்டிருக்கும் பணியை சரியாக செய்து முடித்து மறுபடியும் அனுப்புவது. இதற்கு கணினி, இணையதளம் மற்றும் வலைத்தளம் முக்கிய பங்காற்றுகிறது.
இந்தியாவில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பெரிய நகரங்களில் பிபிஓ மற்றும் கேபிஓ பணிகள் தற்போது கொடிக்கட்டி பறக்கிறது. இ-பப்ளிஷிங் துறையைப் பொறுத்த வரையில் Elsevier, Springer, Science Business Media, Black Well, John Wiley, Kluwer, Taylor & Francis etc...போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், மிகவும் நம்பகத்தன்மையான இந்தியாவில் செயல்பட்டு வரும் இ-பப்ளிஷிங் நிறுவனங்களாகும். இந்தப் பெயர்களை ஏன் இங்கு சொல்கிறோம் என்றால், இளைஞர்களின் உழைப்பை முற்றிலும் சுரண்டி அவர்களுக்கு சரியான ஊதியம் வழங்காத நிறுவனங்களும் ஒரு சில இயங்கி வருவதால் தான்.
இ-பப்ளிஷிங் என்றால் என்ன?
நமக்கு தெரிந்து எல்லாம் அச்சகத்தில் எழுத்துக்களை கோர்த்து, அச்சு அடித்து புத்தக வடிவிலோ, நோட்டீஸ்சாகவோ, சுவரொட்டி வடிவங்களாக வட்டும்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இ-பப்ளிஷிங் என்பது நாம் மேலே பார்த்த புத்தக்ங்கள், ஆராய்ச்சிக் வரலாற்று விஷயங்கள் எல்லாவற்றையும் கணினியில் டைப் செய்து இ-பப்ளிஷிங்க மூலம் இணையதளத்தில் வெளியிடுவார்கள்.
என்னென்ன துறைகள் இருக்கின்றன?
எடிட்டோரியல், மாஸ்டர் காப்பியிங், புரடக்ஷன் எடிட்டர்- காப்பி எடிட்டர், ஆர்ட்ஒர்க், ஸ்கேனிங், பக்க வடிவமைப்பு, லேங்குவேஜ் எடிட்டர், தரக்கட்டுப்பாட்டாளர், டேட்டா செட் போன்ற பிரிவுகளின் கீழ் பணிகளில் சேரலாம்.
கல்வித் தகுதிகள் என்ன?
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
பட்டர் படிப்பு, முதுகலைப் பட்டப் படிப்பு மட்டுமில்லாமல், எம்.பில். பி.எச்டி. படித்த மாணவர்களுக்கும் இ-பப்ளிஷிங் துறையில் கை நிறைய சம்பளத்துடன் வேலைவாய்ப்பு இருக்கிறது.
இந்தப் பணியில் பகுதி நேரமாகவோ அல்லது முழுநேரமாகவோ சேர்ந்து கொள்ளலாம்.
ஊதியம் எப்படி?
படிப்பிற்கு தகுந்தாற் போல் ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது.

Tuesday, January 7, 2014

உதவித் தொகையுடன் அறிவியல் படிப்பு


பொதுவாக அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. பொறியியல், மருத்துவப் படிப்புகளைத் தாண்டி யோசிப்பதே அரிதாகி வருகிறது. அதனால் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச் (IISER) கல்வி நிறுவனம், இது தொடர்பான படிப்புகளை வழங்கி வருகிறது. புனே, போபால், கொல்கத்தா, மொஹாலி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இக்கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கவும் மாணவர்கள் ஆர்வம் காட்டலாம்.
IISER எனப்படும் இந்தக் கல்வி நிறுவனம், பி.எஸ்.-எம்.எஸ்., பிஹெச்.டி மற்றும் ஒருங்கிணைந்த பிஹெச்.டி உள்ளிட்ட படிப்புகளை வழங்குகின்றன. 5 ஆண்டு பி.எஸ்.-எம்.எஸ். படிப்பு, இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, பிளஸ் 2 படிக்கும்போதே இந்தப் படிப்பு பற்றியும் மாணவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது.
IISER நிறுவனத்தில் பி.எஸ்.-எம்.எஸ். படிப்பதில் வித்தியாசம் உண்டு. இப்படிப்பில் சேரும் மாணவர்கள், முதல் 2 ஆண்டுகளில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களைப் படிப்பார்கள். இதன்மூலம், எந்தப் பாடத்தில் தங்களுக்கு நல்ல திறன் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மாணவர்களுக்குப் போதுமான நேரம் கிடைக்கும்.
அடுத்த 3 ஆண்டுகளில், தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தேர்வுசெய்து, அதை விரிவாகப் படிப்பார்கள். மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் 5 ஆண்டு காலத்துக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. IISER கல்வி நிறுவனத்தில், தமிழகத்திலிருந்து வெறும் 5 சதவீத மாணவர்கள் மட்டுமே சேர்கிறார்கள். நுழைவுத் தேர்வு, மாணவர் சேர்க்கை, உதவித்தொகை உள்ளிட்ட விரிவான விவரங்களை http://www.iiser-admissions.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பிளஸ் - 2 முடித்தவுடன் மாஸ்டர் டிகிரி படிக்கலாம்!

பிளஸ் 2 முடித்தவுடன் பட்டப்படிப்பு மட்டுமல்ல பட்டமேற்படிப்பு படிக்கவும் வாய்ப்பு உள்ளது. இன்டகிரேட் எம்.எஸ்சி. புரோகிராம் மற்றும் இன்டகிரேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் ஆகிய பட்டமேற்படிப்புகள் உள்ளன. இப்படிப்பில் சேர கடும் போட்டி நிலவுவதால், இதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே உள்ளன. படித்து முடித்தவுடன் பணி வாய்ப்பு அளிக்க அரசுத் துறையும், தனியார் துறையும் தயாராக இருக்கின்றன. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே, நுழைவுத் தேர்வுக்கு தயாராவதன் மூலம் வெற்றி நிச்சயம். ஆங்கில வழியில் இதற்கான தேர்வை நடத்துகின்றனர்.
பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களை எடுத்தவர்கள், இன்டகிரேட் எம்.எஸ்சி, புரோகிராம் ஐந்தாண்டு பட்ட மேற்படிப்பை படிக்கலாம். நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட் (NEST) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்திய அரசின், டிபார்ட்மென்ட் ஆஃப் அடாமிக் எனர்ஜி மேற்பார்வையில், இந்த நுழைவுத் தேர்வை புவனேஸ்வரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் எஜூகேஷன் அண்டு ரிசர்ச், மும்பையில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் மும்பை சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் பேசிக் இன் சைன்ஸ், மேற்கு வங்காளத்தில் உள்ள இன்டகிரேட் சைன்ஸ் எஜூகேஷன் அண்டு ரிசர்ச் சென்டர் ஆகிய மூன்று அரசு கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.
இந்த மூன்று கல்வி நிறுவனங்களில் மொத்தம் 156 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்தியா முழுவதும் இருந்து பல லட்சம் மாணவர்கள், இத்தேர்வை எழுதுகின்றனர். வரும் மே 31ம் தேதி நெஸ்ட் நுழைவுத் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் மதுரை, சென்னை ஆகிய இரு தேர்வு மையங்கள் உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஆன்-லைன் மூலம் (www.nestonline.in) வரும் பிப். 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத் தேர்வு அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளை கொண்டது. கட்டாயமான முதல் பிரிவு பொது அறிவு திறன் தேர்வுக்கு மட்டும் நெகடிவ் மார்க் கிடையாது. இரண்டாவது பிரிவில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பிரிவில், ஏதாவது மூன்று பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து, தேர்வு எழுத வேண்டும். தேர்வில் வெற்றி பெற்று கல்லூரியில் சேரும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக 5000 ரூபாயும், ஆண்டுக்கு ஒரு முறை மே மாத சம்மர் புராஜெக்ட்டிற்கு 20,000 ரூபாய் அரசு அளிக்கிறது. அறிவியல் துறை சார்ந்த பட்டமேற்படிப்பு என்பதால், சகலவித அரசு, தனியார் துறைகளிலும் வேலை அளிக்க காத்திருக்கின்றனர்.
பிளஸ் 2 முடித்ததும், மேனேஜ்மென்ட் பட்டமேற்படிப்பு படிப்பவர் களுக்காக, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - இண்டூர் மூலம் இன்டகிரேட் புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வு நடத்துகிறது. இதற்கு மே மாதம் தேர்வு நடத்தப்படுகிறது. வரும் ஏப்., இரண்டாவது வாரத்திற்குள், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு மொத்தம் இரண்டு மணி நேரம், 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. அப்ஜெக்டிவ் வகை கேள்வியை கொண்டுள்ளது. இண்டூர், பெங்களூரு, மும்பை, டெல்லி, கோல்கத்தா, ஐதராபாத் ஆகிய பெரு நகரங்களில் மட்டுமே இதற்கான நுழைவுத் தேர்வு நடக்கிறது.
இந்தாண்டு சென்னையில் இதற்கான நுழைவுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளனர். பொறியியல் பயிலும் மாணவர்கள் ஐ.ஐ.டி.யில் இணைந்து படிக்க ஆசைப்படுவதைப் போன்று, எம்.பி.ஏ. படிக்க விரும்புபவர்களின் கனவாக, ஐ.ஐ.எம். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று பயில ஆசைப்படுகின்றனர். மொத்தம் 120 இடங்களுக்கு கடும் போட்டி உள்ளதால், தேர்வுக்கு நன்றாக தயாராவது அவசியம். இவ்விரு நுழைவுத் தேர்விலும் வெற்றி பெறுபவர்கள், வாழ்க்கையில் மேன்மை அடைவது நிச்சயம்.

Sunday, January 5, 2014

வெளிமாநில மருத்துவ இட ஒதுக்கீட்டை பெற...


உயர்நிலைப் பள்ளியில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பிரிவை தேர்ந்தெடுத்துப் படித்துள்ள மாணவர்கள் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் சேரலாம்.

மருத்துவ கல்வி நிறுவனங்களில் வெளிமாநில மாணவர்கள் படிக்கும் வகையில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இவற்றை நிரப்ப தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. தமிழக மாணவர்கள் வெளிமாநில கல்லூரிகளிலும் சேர்ந்து படிப்பதற்கு வசதியாக எந்தெந்த கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் விவசாயம் சார்ந்த படிப்புகளில் இடம் ஒதுக்கப்படுகிறது என்பதைப் பற்றியும், தேசிய அளவில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளைப் பற்றியும் பார்ப்போம்.

1. ஆல் இந்தியா பிரி மெடிக்கல்/டென்டல் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்: இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை மெடிக்கல்/டென்டல் கல்லூரிகளில் 15 சதவீத இடங்கள் மெடிக்கல்/டென்டல் படிப்புகளில் இந்த நுழைவுத்தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. இது ஜம்முகாஷ்மீர் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் இல்லை.இந்த மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மெடிக்கல்/டென்டல் கல்லூரிகளில் உள்ள மொத்த காலியிடங்கள் அங்கு சேரும் அந்த மாநில மாணவர்களுக்கு தேவைப்படும் இடங்களை விட குறைவாக உள்ளன. எனவே இந்த மாநிலங்களில் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவதில்லை. இதில் வெற்றி பெறுவதற்கேற்ப மாணவர்கள் சிறப்புப் பயிற்சி எடுக்க வேண்டும். இத்தகைய பயிற்சிகள் நாட்டின் அனைத்து மருத்துவ நுழைவுத்தேர்வுகளுக்கும் பொருந்தும்.

2. ஏ.ஐ.ஐ.எம்.எஸ்., (ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்), அன்சாரி நகர், நியூடில்லி -110608, டில்லி. தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு வழியாக நிரப்பப்படுகிறது.

3. வேலூர் மற்றும் லூதியானாவில் உள்ள ‘சி.எம்.சி.,’ (கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி): இங்கு மருத்துவம், பிஸியோதெரபி, ஆக்குபேஸனல் தெரபி, நர்ஸிங், மெடிக்கல் லபாரட்ரி டெக்னாலஜி போன்ற பல இளங்கலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். இந்த கல்லூரியில் கிறிஸ்தவ மாணவர்களுக்கென இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. சில தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி சான்றிதழ்கள் வழங்குகின்றன. இந்த கல்வி நிதி உதவி சான்றிதழ்களை கிறிஸ்தவ மாணவர்கள் பெற வேண்டுமெனில் ‘பைபிள் நாலெட்ஜ் டெஸ்ட்’ தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

4. ஜிப்மர் (ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேஷன் அண்டு ரிசர்ச்), புதுச்சேரி. நுழைவுத்தேர்வு வழியாக இடம்.

5. ராணுவ மருத்துவ கல்லூரி, புனே (ஆர்ம்டு போர்ஸஸ் மெடிக்கல் காலேஜ்). இக்கல்லூரியில் 105 மாணவர்கள், 25 மாணவிகள் உட்பட மொத்தம் 130 மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். இங்கு சேர கல்விக்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இக்கல்லூரி தங்கும் வசதி, உணவு, புத்தகங்கள், சீருடைகள், மாணவர்கள் தங்கள் விடுமுறை நாட்களில் கல்லூரியில் இருந்து வீட்டுக்கும், திரும்ப கல்லூரிகளுக்கு வருவதற்கும் ஏ.சி.,மற்றும் 3 அடுக்கு இருக்கை வசதி கொண்ட ரயில்களில் பயணம் போன்ற அனைத்தும் இலவசமாக மாணவர்களுக்கு வழங்குகிறது. இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் ராணுவத்தில் சேர்ந்து பணி புரிவதற்குரிய உடல் திறன் மற்றும் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். இங்கு படிப்பவர்கள் ராணுவ மருத்துவமனைகளில் பணிபுரியலாம்.

6. மருத்துவ அறிவியல் நிறுவனம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரனாசி: எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.எ.எம்.எஸ்., (ஆயுர்வேதம்) போன்ற படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தேர்வுகள் நடத்துகிறது.

7.மகாராஷ்டிரா மாநிலத்தின் வார்தா மாவட்டத்தில் உள்ள சேவாகிராமில் செயல்படும் ‘தி மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்’ கல்வி நிறுவனம் மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்துகிறது. இதில் காந்திய சிந்தனை பற்றி விரிவாகவும், உயிரியல், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் கொள்குறி வகையிலும் தேர்வு நடைபெறும். பொதுவாக இந்த நுழைவுத்தேர்வு ஐதராபாத், நாக்பூர், மும்பை, டில்லி போன்ற நகரங்களில் நடத்தப்படுகின்றன.

8. பாரதிய வித்யாபீட பல்கலைக்கழகம்: புனே மற்றும் சாங்லி மாவட்டங்களில் உள்ள இந்த மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்களின் வயது மற்றும் கல்வித்தகுதி ஆகியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை மிக எளிமையாக உள்ளது.
சில கல்வி நிறுவனங்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படலாம்.

9. மணிப்பால் பல்கலைக்கழகம்: கர்நாடக மாநிலத்தின் மணிப்பால் மற்றும் மங்களூருவில் உள்ள கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரிகள்.

10. ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் காலேஜ் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட், போரூர், சென்னை- 600 116. - இந்தக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., /பி.டி.எஸ்.,/பி.பி.டி.,/பி.எஸ்சி., நர்ஸிங்/பி. பார்ம்/பி.எஸ்சி., ஸ்பீச் அண்டு ஹியரிங் போன்ற பட்டப்படிப்புகள் உள்ளன.

11. அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், தமிழ்நாடு: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., மற்றும் பி.எஸ்சி நர்ஸிங்., போன்ற படிப்புகளுக்கு நுழைவு தேர்வு உள்ளன.

12. ஆல் இந்தியா அக்ரிகல்சுரல் என்ட்ரன்ஸ்: ‘ஐ.சி.ஏ.ஆர்.,’ (இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சுரல் ரிசர்ச்)நிறுவனம் தேசிய அளவில் நடத்தும் பொது நுழைவுத் தேர்வு மூலம் பொதுத்துறை கல்வி நிறுவனங்களில் 15 சதவீதம் இடங்கள் நிரப்பப்படுகின்றன.

இதன்மூலம் விவசாயம், தோட்டக்கலை, பாரஸ்ட்ரி, பிஷரிஸ், பட்டுப்பூச்சி வளர்ப்பு போன்ற விவசாயம் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்புகளில் மாணவர்கள் சேரலாம். இந்த ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் 41 மாநில அரசு விவசாய பல்கலைக்கழகங்களும், மத்திய அரசு விவசாய பல்கலைக்கழகமும் (இம்பால்), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், விஸ்வ பாரதி மற்றும் நாகலாந்து பல்கலைக்கழகங்கள் போன்ற விவசாயக்கல்வி ஆசிரியர்கள் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் போன்றவை அடங்கியுள்ளன.

அரியானா மாநிலம், கர்னல் மாவட்டத்தில் உள்ள ‘நேஷனல் டைரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்’ல் உள்ள பாடப்பிரிவுகளில் ‘டைரி சயின்ஸ்’ என்ற பட்டப்படிப்பில் உள்ள அனைத்து இடங்களுக்கும் இந்த நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்தே மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ‘நேஷனல் டேலன்ட் ஸ்காலர்ஷிப்’ (என்.டி. டி.,) எனப்படும் தேசிய அளவில் கொடுக்கப்படும் உதவித்தொகைகளுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட இதில் பெறப்படும் மதிப்பெண்கள் உதவும்.‘ ஐ.சி.ஏ.ஆர்’ மற்றும் ‘எஸ்.ஏ.யு.,’(ஸ்டேட் அக்ரிகல்சர் யுனிவர்சிட்டி) ஆகியவற்றின்கீழ் செயல்படும் எந்த பல்கலைக்கழகங்களிலும் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் இத்தகைய நுழைவுத்தேர்வில் தேர்வு பெற்றிருந்தால் மாதம் தோறும் ‘என்.டி.எஸ்’ ரூ.1000 (ரூ.ஆயிரம் மட்டும்) வழங்கப்படும். வெளி மாநிலங்களில் சென்று படிக்கும் மாணவர்களுக்கும் இத்தகைய உதவித்தொகை வழங்கப்படும்.

13. ஆல் இந்தியா வெட்ரினரி என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்: நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை கல்வி நிறுவனங்களில் ‘பி.வி.எஸ்சி., அண்டு ஏ.ஹெச்.,’ (பேச்சிலர் ஆப் வெட்ரினரி சயின்ஸ் அண்டு அனிமல் ஹஸ்பண்ட்ரி) படிப்பில் 15 சதவீத இடங்கள் இந்த நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. அகில இந்திய அளவில் நடைபெறும் இத்தகைய பொது நுழைவுத்தேர்வை ‘வெட்ரினரி கவுன்சில் ஆப் இந்தியா’ நடத்துகிறது. இத்திட்டத்தின்கீழ் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலம் இன்னும் வரவில்லை. கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெறும் மாணவர்களுக்கு வருமானம் குறைவாக உள்ளது.

மருத்துவ முதுகலைப் பட்டம் பெற்றவர்களிடமோ, மருத்துவ நிபுணர்களிடமோ சென்றுதான் நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் இந்த கால்நடை மருத்துவத்துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் கூட சாதிக்கலாம். இத்துறையில் முதுகலைப்பட்டப்படிப்புகளிலும் மாணவர்கள் சேர்ந்து எளிதில் தேர்ச்சி பெறலாம். இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் பலர் சாதனை புரிந்து வருகின்றனர்.

அரசு கால்நடை மருத்துவநிறுவனங்கள், கால்நடைப் பண்ணை, பால் பண்ணை, கோழிப் பண்ணை, பன்றிப் பண்ணைகள், மிருகக்காட்சி சாலைகள், தனியார் கால்நடை மருத்துவமனைகள், ராணுவக் கால்நடை மருத்துவமனைகள், மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விலங்கு பாதுகாப்புத் துறைகள், சரணாலயங்கள், குதிரைப்பந்தயம் நடைபெறும் இடங்கள், கால்நடை உற்பத்தி மையங்கள், ஆய்வுக்கூடங்கள் மற்றும் பல நிறுவனங்களுக்கு கால்நடை மருத்துவர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. தனியார் நிறுவனங்களில் கால் நடை மருத்துவர்களுக்கு சிறப் பான எதிர்காலம் உள்ளது.
நன்றி: கல்விமலர்