Tuesday, December 24, 2013

சி.ஏ. படிப்பது கனவல்ல நிஜம்!



போராடிக் கிடைக்கும் வெற்றிக்கு தனி மதிப்பு உண்டுதானே. அப்படிதான் சி.ஏ.வும். அதைப் படிக்க விரும்புபவர்கள் தீவிர லட்சியத்துடன் திட்டமிட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம். கணிதவியல் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, கணிதப் பாடப் பிரிவு படித்தவர்களும் சி.ஏ. படிக்கலாம். உலகம் முழுவதும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. எனவே, சி.ஏ. படித்தவர்களுக்கு எப்போதுமே சிறப்பான எதிர்காலம் உண்டு.

இதைப் படிக்க விரும்புவோர் கணிதவியல், புள்ளியியல், வரி இனங்கள், சட்டம் போன்றவற்றில் அடிப்படை அறிவு பெற்றிருப்பது அவசியம். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே சி.ஏ. கவுன்சில் மூலம் சி.பி.சி. (காமன் புரஃபிசியன்சி கோர்ஸ்) மெட்டீரியலை வாங்கிப் படிக்கலாம்.
சிறப்பான எதிர்காலத்துக்கு சி.ஏ. படியுங்கள்

பிளஸ் 2 முடித்தவுடன் சி.பி.டி. (காமன் புரஃபிசியன்சி டெஸ்ட்) தேர்வு எழுதலாம். ஜூன், டிசம்பர் என ஆண்டுக்கு இரு முறை இத்தேர்வு நடக்கிறது. இதை எழுத 3 மாதங்களுக்கு முன்பே சி.ஏ. கவுன்சிலில் பதிய வேண்டும்.

இத்தேர்வு முதல் பகுதியில் இரண்டு பிரிவாகவும், இரண்டாம் பகுதியில் இரண்டு பிரிவாகவும் நடத்தப்படுகிறது.

இதில் தேறியவர்கள் ஓரியன்டேஷன் புரோகிராமுக்கு செல்லவேண்டும். அதன் பின்பு, இன்பர்மேஷன் டெக்னாலஜி டிரெய்னிங் (ஐ.டி.டி.) மொத்தம் 100 மணி நேரம் நடக்கும். சி.ஏ. தேர்வு எழுதுவதற்குள் இந்த 100 மணி நேரப் பயிற்சியை நிறைவு செய்வது அவசியம்.

அடுத்ததாக, இன்டர்மீடியட் தேர்வு. இதுவும் இரு பிரிவுகளைக் கொண்டது. ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றால் சி.ஏ. பிராக்டிஸ் செய்யும் ஆடிட்டரிடம் 3 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும்.

பயிற்சிக்குச் செல்வதால் பணிச் சுமை, ஆர்வமின்மை, நேரம் போதாமை போன்ற காரணங்களால் மற்றொரு தேர்வில் தேர்ச்சி பெறுவது சிரமமாகத் தெரியலாம். அதனால், இரு பிரிவிலும் தேர்ச்சி பெற்ற பிறகு, ஆடிட்டரிடம் பயிற்சிக்குச் செல்வது நல்லது.

இன்டர்மீடியட் தேர்வில் இரு பிரிவிலும் தேர்ச்சி பெற்று, ஆடிட்டரிடம் 3 ஆண்டுகள் பயிற்சி முடித்த பின்னரே, சி.ஏ. இறுதித் தேர்வுக்கு செல்ல முடியும்.

பி.காம்., பி.பி.ஏ., மற்றும் கணிதப் பாடம் எடுத்து பட்டப் படிப்பு முடித்தவர்கள் காமன் புரஃபிசியன்சி டெஸ்ட் (சி.பி.டி.) தேர்வு எழுதத் தேவையில்லை. நேரடியாக சி.ஏ. தேர்வுக்கு தயாராகலாம்.

சி.ஏ. படித்து முடிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே, வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. வருமானமும் மிக அதிகம். ‘சி.ஏ. தேர்வில் வெற்றி’ என்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு படித்தால் வெற்றி நிச்சயம்!
கல்வியில் இல்லை ஏற்றத்தாழ்வு!!



மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட பட்டப்படிப்புகள் பற்றி தெரிந்துகொண்டோம். இவற்றுக்கு இணையாக கலை, அறிவியல் பட்டப்படிப்புகளுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. மருத்துவம், பொறியியல் மட்டுமே சிறந்த படிப்புகள் என்பது மாயை. கல்வியில் ஏற்றத்தாழ்வு கிடையாது. கற்பதிலும் அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதிலுமே வெற்றிக்கான சூட்சுமம் இருக்கிறது.

பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றால் கலை, அறிவியல் படிப்பைத் தேர்வு செய்வதும், அதிக மதிப்பெண் பெற்றால் அறிவியல், கணிதம் பாடப் பிரிவைத் தேர்வு செய்வதுமே நடைமுறையில் உள்ளது. ஆனால், எதிர்காலத்தில் எந்த துறையில் சாதிக்க விரும்புகிறோம் என்கிற சுய ஆர்வத்தின் அடிப்படையிலேயே உங்களது பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.

கலை, அறிவியல் பாடப் பிரிவை பிளஸ் 1 வகுப்பில் தேர்வு செய்பவர்கள், குறிப்பாக கணிதம், தொழில் கணிதவியல் பாடப்பிரிவை தேர்வு செய்வது, எதிர்கால பட்டப் படிப்புக்கு உகந்ததாக அமையும். தரம் வாய்ந்த பெரிய கல்லூரிகளில் கணிதம், தொழில் கணிதவியல் எடுத்த மாணவர்களை, கலை, அறிவியல் பட்டப் படிப்புக்கு சேர்த்துக்கொள்கின்றனர். கணிதம் வராது என்று நமக்கு நாமே தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல், திட்டமிட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம்.

கலை, அறிவியல் துறையில் ஏராளமான துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பி.ஏ. பொருளாதாரம், பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ. படிப்புகள் காஸ்ட் அக்கவுன்டன்சி வொர்க், கம்பெனி செகரட்டரிஷிப் உள்ளிட்ட துறைகளில் நல்ல வேலைவாய்ப்புகளை அளிக்கின்றன. சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ., தேர்வில் வெற்றி பெறுவது கடினம் என்ற எண்ணத்தை உடைத்தெறியுங்கள். ஆர்வம் மற்றும் கவனத்துடன் படித்தால் நிச்சயம் சாதிக்கலாம்.

கலை, அறிவியல் பட்டப்படிப்பில் விஷுவல் கம்யூனிகேஷன், பேஷன் டிசைனிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங், ஜெர்னலிஸம், எலக்ட்ரானிக் மீடியா உள்ளிட்ட படிப்புகளை தேர்வு செய்து படிப்பதன் மூலம் எதிர்கால வாழ்க்கை சிறக்கும். இதில் பட்ட மேற்படிப்புகளான எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க் உள்ளிட்டவை படிக்கலாம். பி.ஏ. ஆங்கிலம், வரலாறு, தமிழ், பொருளாதாரம் படிப்பதன் மூலம் ஆசிரியர் பணி பெறலாம். சட்டத் துறையிலும் சாதிக்க முடியும். பி.ஏ. கார்ப்பரேட் செகரட்டரிஷிப், பி.ஏ. கோ-ஆபரேட்டிவ் உள்ளிட்டவை எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடியவை.

கலை, அறிவியல் படிப்புகளில் உள்ள பல்வேறு வகையான பாடப் பிரிவுகள், அதைப் படிப்பதால் எந்தத் துறையில், எவ்வாறு சாதிக்க முடியும் என்பதை வரும் நாட்களில் அறிந்துகொள்ளலாம்.


கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி


தொழிற்கல்விக்கு இணையான கணிதம், இயற்பியல்!!




தொழிற்கல்விக்கு இணையான படிப்புகளாக பி.எஸ்சி. கணிதம் மற்றும் இயற்பியல் கருதப்படுகின்றன. கணிதம், இயற்பியல் ஆசிரியர்களுக்காக பள்ளி, கல்லூரிகள் தவம் கிடக்கின்றன. படித்து முடித்ததும் நிச்சயமாக வேலைவாய்ப்பைப் பெற்றுத் தரக்கூடிய படிப்புகளாக பி.எஸ்சி. கணிதம் மற்றும் இயற்பியல் விளங்குகின்றன. இப்படிப்பைத் தேர்வு செய்பவர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
சென்னை தரமணியில் உள்ள சென்னை மேத்தமேட்டிக்கல் இன்ஸ்டிடியூட் மூலம் பி.எஸ்சி. கம்ப்யூடேஷன் மேத்தமேட்டிக்ஸ் படிக்கலாம். இதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. கடினமான தேர்வு என்று கருதப்பட்டாலும் கணிதத்தை நேசிப்பவர்களுக்கு இது வெகு சுலபமே. இங்கு கடும் போட்டி நிலவுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சென்று புராஜக்ட் செய்கின்றனர்.
இந்தக் கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள் அதற்காக வருத்தப்பட வேண்டாம். பி.எஸ்சி. கணிதம் முடித்துவிட்டு கம்ப்யூடேஷன் மேத்தமேட்டிக்ஸ், ஆபரேஷன் இன் ரிசர்ச், புள்ளியியல், அப்ளைடு மேத்தமேட்டிக்ஸ் போன்ற எம்.எஸ்சி. மேற்படிப்புகளைப் படிக்கலாம். தவிர, எந்த மேற்படிப்பு படித்தால் கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை ஆராய்ந்து திட்டமிட்டு படிக்க வேண்டும். எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகள் மூலம் பெரும் நிறுவனங்களில் நிர்வாகத் துறையில் பிரகாசிக்கலாம்.
பி.எஸ்சி. கணிதம் மற்றும் இயற்பியல் முடித்தவர்கள் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து பொறியாளர் ஆகலாம். இதற்கு ஆண்டுதோறும் ஒரு சதவீதம் இடஒதுக்கீடு உண்டு. இதன் மூலம், ‘பிளஸ் 2 முடித்ததும் தொழிற்கல்வியில் சேர முடியவில்லையே’ என ஏக்கப்படும் மாணவர்கள் பொறியாளராக முடியும்.
பி.எஸ்சி. இயற்பியல் படிப்பவர்கள் ஆராய்ச்சிப் படிப்புகளை படிப்பதன்மூலம் சிறந்த எதிர்காலத்தைப் பெற முடியும். இவர்கள் ஆசிரியர் பணியில் சேரவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. தவிர, எம்.எஸ்சி. ஸ்பேஸ் சயின்ஸ், அட்மாஸ்பியர் சயின்ஸ், நியூக்ளியர் பிசிக்ஸ், மெடிஷனல் பிசிக்ஸ், எலக்ட்ரானிக்கல்ஸ் அப்ளைடு பிசிக்ஸ் போன்ற பட்ட மேற்படிப்புகளைப் படிப்பவர்களுக்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
பிளஸ் 2 முடித்ததும் ஐ.ஐ.டி. கல்லூரியில் சேர முடியவில்லை என்று ஏக்கப்படுபவர்கள் பி.எஸ்சி. கணிதம் மற்றும் இயற்பியல் முடித்ததும், ஜே.ஏ.எம். (ஜாயின்ட் அட்மிஷன் எம்.எஸ்சி.) நுழைவுத் தேர்வு மூலம் பட்ட மேற்படிப்புகளைப் படிக்கலாம். பி.எஸ்சி. கணிதம், இயற்பியல் படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை.
நன்றி: தி இந்து 

வேலைக்கு உத்தரவாதம் தரும் தமிழ், ஆங்கிலப் படிப்புகள்!!



கலை, அறிவியல் பாடப் பிரிவுகளில் அற்புதமான படிப்புகள் பி.ஏ. தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியம். இவற்றைப் படிக்க ஆர்வம் அவசியம். மேலும் இவற்றைப் படிப்பவர்கள் ஆசிரியர் பணிக்குதான் செல்ல வேண்டும் என்று இல்லை. ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள் எம்.பி.ஏ., டெக்னிக்கல் ரைட்டிங், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள், டிராவல்ஸ் டூரிஸம், மொழிபெயர்ப்பாளர், பப்ளிக் ரிலேஷன்ஷிப் என பல பரிமாணங்களில் பிரகாசிக்கலாம். சர்வதேச நிறுவனங்களில் மொழி பெயர்ப்பாளர் பணிகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஆனால், அப்பணிக்கு ஏற்ற தகுதி, திறமையுடன்கூடிய ஆட்கள் கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. தவிர, நிறைவான ஊதியத்தில் அரசு ஆசிரியர் பணியிலும் சேரலாம்.
தற்போது தமிழகத்தில் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் 15 லட்சம் மாணவர்கள் எழுதுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு கூடுதலாக 50 % கல்வி நிறுவனங்கள் தேவை. இதனால், பி.ஏ., பி.எட். முடித்த ஆங்கில இலக்கிய ஆசிரியர் பணியிடத்துக்கான தேவை அதிகரிக்கும். எனவே, பி.ஏ., பி.எட். மற்றும் எம்.ஏ., எம்.எட். படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் உள்ளது. எம்.பில்., பிஎச்.டி. போன்ற ஆராய்ச்சிப் படிப்புகள் மூலம் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஆங்கில இலக்கியத்துக்கு இணையாக பி.ஏ. தமிழ், இலக்கியம் படிப்பவர்களுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. வருங்காலத்தில் கல்வித் துறையில் மும்மொழித் திட்டத்தை செயல்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இதன்மூலம் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழ் கட்டாயப் பாடமாகும் நிலை உருவாகும். மேலும், இதழியல் (ஜர்னலிசம்), எம்.பி.ஏ., விஷுவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்புகளைத் தேர்வு செய்வதன்மூலம் கலை, பண்பாட்டுத் துறைகள் போன்ற துறைகளிலும் வேலைவாய்ப்பைப் பெற முடியும்.
இது மட்டுமின்றி, தமிழ், ஆங்கில இலக்கியம் படிப்பவர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் பெருமளவு வெற்றி பெறுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
கலை, இலக்கியம், மீடியா ஆகிய துறைகளில் சாதிக்க நினைப்பவர்கள் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், ஆங்கில இலக்கியம் ஆகிய பட்டப்படிப்பிலிருந்து தங்களது உயர்கல்வியைத் துவங்கலாம். மேலும், மொழி மீது அதிக ஆர்வம் உள்ளவர்கள்
தங்களது மனதுக்குப் பிடித்த கல்வியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நல்ல சாதனையாளராக உருவெடுக்க முடியும். அரசுப் போட்டித் தேர்வுகள் எழுதுவதால் உயர் பொறுப்புகளுக்கும் செல்ல முடியும்.

ஊடகங்களில் சாதிக்க உதவும் படிப்புகள்!

பிளஸ் 2 வகுப்பில் வணிகவியல், அறிவியல் என இரு பிரிவுகளில் படித்தவர்களும் பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கலாம். மூன்றாண்டு ஆங்கிலவழிக் கல்வி பட்டப் படிப்பு இது. செய்தி ஊடகம், சினிமா, வெப்-டிசைன், புகைப்படத் துறை, விளம்பரத் துறை ஆகியவை வளர்ச்சிப் பாதையில் செல்வதால், இப்படிப்பு மாணவர்களின் சிறந்த தேர்வாக அமையும். பிளஸ் 2 வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் இதற்கு இடம் ஒதுக்கப்படுகிறது. சில கல்லூரிகளில் நுழைவுத் தேர்வும் உண்டு. இதில் 60 சதவீதம் பயிற்சிக் கல்வி என்பதால், தமிழ்வழிக் கல்வி மாணவர்களும் எளிதில் தேறலாம்.
இதில் வெப் டிசைனிங், கிராஃபிக்ஸ் டிசைனிங், பிரின்ட்டிங் பப்ளிகேஷன், மல்டி மீடியா, அட்வர்டைசிங், போட்டோகிராஃபி, சவுண்ட் டெக்னாலஜி, வீடியோகிராஃபி உள்ளிட்டவை கற்பிக்கப்படுகின்றன. பொதுவாக பிளஸ் 2-வில் வணிகவியல் பிரிவு படித்தவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க முடியாதே என்ற ஏக்கம் இருக்கும்.
ஆனால், அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேரடியாக ஐந்தாண்டு படிப்பான எம்.எஸ்சி. எலக்ட்ரானிக் மீடியா பட்டப் படிப்பு படிக்கலாம். இது பலருக்கும் தெரியாது. எலக்ட்ரானிக் மீடியாவின் ஆதிக்கம் சர்வதேச அளவில் வளர்ச்சி கண்டு வரும் நிலையில், இதைப் படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் நிச்சயம்.
பிளஸ் 2 வகுப்பில் எந்தப் பிரிவு படித்த மாணவர்களும், பி.ஏ. இதழியல் (ஜர்னலிசம்) படிக்கலாம். பிரின்டிங் மீடியாவும் விஷுவல் மீடியாவும் பெரும் வளர்ச்சி கண்டுவரும் நிலையில், இதை படிப்பவர்களுக்கான வேலைவாய்ப்பு கூடுதலாக இருக்கிறது.
ஆங்கில மொழித் தொடர்பு, டிசைனிங் பிரின்ட்டிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், எடிட்டிங் விஷுவல் கம்யூனிகேஷன், ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம், போட்டோகிராஃபிக் பிரின்டிங் உள்ளிட்டவை இதில் கற்பிக்கப்படுகின்றன. சினிமா, டி.வி. நிகழ்ச்சி, எஃப்.எம். என தற்போது மீடியாவில் பெண்கள் பெருமளவு சாதிக்கிறார்கள். எனவே, பெண்களும் இதைத் தேர்வு செய்து ஆர்வத்துடன் படித்தால் மீடியா துறையில் சாதனை படைக்கலாம்.

Saturday, December 21, 2013

பொருளாதாரப் படிப்புகளுக்கு உலகம் முழுக்க வரவேற்பு

நன்றி: கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி


பி.காம். படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு சிறந்த மாற்றாக பி.ஏ. பொருளாதாரம், பி.பி.ஏ., பி.பி.எம். பட்டப்படிப்புகள் விளங்குகின்றன. பி.ஏ. பொருளாதார படிப்புக்கு உலக அளவில் நல்ல மதிப்பும் வரவேற்பும் இருக்கிறது. வரும் ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மட்டுமின்றி, தனியார் வங்கிகளிலும் பொருளாதாரம் படித்த 7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.
பி.ஏ. பொருளாதாரத்தில் பணம், வங்கி செயல்பாடு, மதிப்பீடு செய்து ஆய்வு செய்தல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. கணிதவியல், விற்பனை, சர்வதேச பொருளாதாரம், துல்லிய பொருளாதாரம், புள்ளியியல், ஃபைனான்ஷியல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்படுவதால், பொருளாதாரம் படித்தவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களிலும் முக்கியத்துவம் கிடைக்கிறது. நல்ல கல்லூரியைத் தேர்வு செய்து படிப்பவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பணி வாய்ப்பு பெற்றுச் செல்கின்றனர்.
கோல்கத்தா, பெங்களூருவில் உள்ள இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில் பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு காத்திருக்கிறது. அறிவியல், கணிதம் படித்தவர்களும் பி.ஏ. பொருளாதாரத்தை எடுத்துப் படிக்கலாம். பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள்கூட எம்.ஏ. பொருளாதாரம் படிக்கலாம். இதன்மூலம் உலக வங்கியிலும் சர்வதேச அளவிலான நிதி நிறுவனங்களிலும் பணிக்குச் செல்ல முடியும்.
வெளிநாடுகளில் பட்டமேற்படிப்பு படிப்பவர்களுக்கு சிறந்த வரவேற்பு உள்ளது. லண்டனில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் கல்லூரியில் இந்திய மாணவர்கள் பலர் படிக்கின்றனர். பொருளாதாரத் துறையில் திறமை, அனுபவம் வாய்ந்தவர்களுக்கு நம் நாட்டில் மட்டுமின்றி, உலக அளவில் தேவை உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு படித்தால் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம்.
இதற்கு அடுத்ததாக பி.பி.ஏ., பி.பி.எம். பட்டப்படிப்புகளைக் கூறலாம். ஒன்றிரண்டு பாடப் பிரிவுகள் தவிர, இந்த இரு படிப்புகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
எம்.பி.ஏ. படிப்புக்கு அடித்தளமாக பி.பி.ஏ. விளங்குவதால், இதில் தொழில் சட்டம், மேலாண்மை கணிதவியல், விற்பனை, மேலாண்மை உற்பத்தி, உபகரண மேலாண்மை, நிதி மேலாண்மை, நேரடி, மறைமுக வரிகள், தொழில்முறை சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மக்கள் தொடர்பு மேலாண்மை உள்ளிட்ட பாடத் திட்டங்கள் உள்ளன. பி.பி.எம். பாடப்பிரிவில் மேலாண்மை தொடர்பான பாடங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
சிறந்த கல்லூரியில் பி.பி.ஏ., பி.பி.எம். படிப்புகளைப் படித்தால் எம்.பி.ஏ. படிப்புக்கு இடம் கிடைப்பது எளிதாக இருக்கும். கவனமாகப் படித்து, அனுபவ அறிவையும் வளர்த்துக் கொண்டால் பி.ஏ. பொருளாதாரம், பி.பி.ஏ., பி.பி.எம். ஆகிய படிப்புகள் நல்ல வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

Friday, December 20, 2013

கால்நடை மருத்துவத்தில் அமோக வேலைவாய்ப்பு!

நன்றி: கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

எம்.பி.பி.எஸ். வாய்ப்பு கிடைக்காதவர்களின் அடுத்த தேர்வாக இருப்பது பி.டி.எஸ். (பல் மருத்துவம்). தமிழகத்தில் அரசு பல் மருத்துவக் கல்லூரி சென்னையில் மட்டுமே இருக்கிறது. அங்கும் 85 இடங்கள் மட்டுமே இருக்கின்றன. அதனால், இதற்கு கடும் போட்டி நிலவுகிறது. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சேர ஓ.சி. பிரிவினருக்கு 196.25, பி.சி.க்கு 195, பி.சி. இஸ்லாமியருக்கு 194.75, எம்.பி.சி.க்கு 193.25, எஸ்.சி.க்கு 188 என நடப்பாண்டில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் வந்தன.
தமிழகத்தில் 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீடு இடங்கள் 937. இக்கல்லூரிகளில் சேர ஓ.சி. பிரிவினருக்கு 193.75, பி.சி.க்கு 189.75, எம்.பி.சி.க்கு 188, எஸ்.சி.க்கு 181.5 என நடப்பாண்டில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் வந்தன. இக்கடும் போட்டியை சமாளிக்க சிறந்த மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியம். பி.டி.எஸ். படிப்பது மட்டுமே சிறந்த எதிர்காலத்தை அளிக்காது. அதன் மேற்படிப்புகளான ஓரல் மேஷன் அண்டு ரேடியாலஜி, ஓரல் சர்ஜரி, என்டோடான்டிக்கல்ஸ் போன்றவற்றைப் படிப்பதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.
பி.டி.எஸ். படிப்புக்கு இணையாக கால்நடை மருத்துவ பட்டப் படிப்புக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது. தமிழகத்தில் சென்னை, நாமக்கல், நெல்லை, தஞ்சை ஆகிய இடங்களில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகள் கிடையாது. இங்கு சேர ஓ.சி.க்கு 196.2, பி.சி.க்கு 195.75, எம்.பி.சி.க்கு 194.50, எஸ்.சி.க்கு 181.25 என நடப்பாண்டில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் வந்தன.
கால்நடை படிப்பைப் பொறுத்தவரை எப்போதுமே வேலைவாய்ப்பு குவிந்து கிடக்கிறது. ஆட்கள்தான் கிடைப்பதில்லை. இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 40 ஆயிரம் கால்நடை மருத்துவப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை. ஆனால், படிப்பை முடிப்பவர்கள் 25,000 பேர் மட்டுமே. இவர்கள் பெரும்பாலும் கிராமச் சூழலில்தான் பணியாற்ற வேண்டியிருக்கும். தனியார் கால்நடைப் பண்ணை மற்றும் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு உண்டு. சுய வேலைவாய்ப்பாக வளர்ப்புப் பிராணிகளுக்கான மருத்துவமனையும் நடத்தலாம்.
இந்தப் படிப்பில் பெண்கள் ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், பெண்களும் இதில் சாதிக்கலாம். சமீபத்தில் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் படித்த பெண், அமெரிக்காவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுத் திரும்பியுள்ளார். கால்நடை மருத்துவப் படிப்பில் இன்னும் நிறைய பிரிவுகள் இருக்கின்றன. அவை நாளை.

கடற்படை பொறியியல் கல்லூரியில் படிப்பு இலவசம், 
வேலை உறுதி





இலவசப் பொறியியல் படிப்பு, படித்து முடித்ததும் உத்தரவாத வேலை எந்தப் படிப்பில் கிடைக்கும்? அதுவும் கடற்படையில் அதிகாரி பணி என்றால் சும்மாவா. இந்த வாய்ப்புகளை வழங்குகிறது மகாராஷ்டிர மாநிலம் பூனேயில் இயங்கிவரும் கடற்படை பொறியியல் கல்லூரி.
மத்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது இந்தக் கல்வி நிறுவனம். இங்குப் பி.டெக். எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் என்ஜினியரிங் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்தப் படிப்புகள் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அங்கீகாரம் பெற்ற படிப்புகள். ஒவ்வொரு பிரிவிலும் தலா 90 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.
4 ஆண்டு காலம் கொண்ட இந்தப் படிப்பு முற்றிலும் இலவசம். படிப்புக்கான அத்தனை செலவையும் இந்தியக் கடற்படையே ஏற்றுக்கொள்கிறது.
தகுதிகள்
பிளஸ் 2வில் அறிவியல், கணிதப் பாடங்களைப் படித்திருக்கும் மாணவர்கள் இதில் சேரலாம்.
இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 55 சதவீத மதிப்பெண்ணும் அவசியம். வயது 16.5 முதல் 19க்குள் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உடலும் பார்வையும் முக்கியம்.
அட்மிஷனைப் பொறுத்தவரையில், முதலில் அறிவுத்திறனைச் சோதித்தறியும் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறுவோருக்குச் சர்வீஸ் செலக்ஷன் போர்டு எனப்படும் பணித் தேர்வு வாரியம் உளவியல் தேர்வு, தனிநபர் தேர்வு, குழுத் தேர்வு, குழு விவாதம், நேர்காணல் ஆகியவற்றை நடத்தும்.
இறுதியாகத் தேர்வு செய்யப்படுவோர் முதல் 6 மாதங்கள் கடற்படை குறித்த அடிப்படை பயிற்சிக்காகக் கோவாவில் உள்ள கடற்படை அகாடெமிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பிறகு பூனேயில் உள்ளக் கடற்படை பொறியியல் கல்லூரியில் படிப்பைத் தொடருவார்கள்.
நேரடிப் பணி
நான்கு ஆண்டு படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பி.டெக். பட்டம் வழங்கும். அதன் பிறகு அவர்கள் இந்தியக் கடற்படையில் நேரடியாக அதிகாரி பணியில் நியமிக்கப்படுவார்கள். தகுதியும் திறமையும் இருந்தால் கடற்படை துணைத் தலைமை தளபதி (வைஸ்-அட்மிரல்) வரை பதவி உயர்வு பெறுவதற்கு வாய்ப்பு உண்டு.
கடற்படை பொறியியல் கல்லூரியில் சேருவது தொடர்பான அறிவிப்பு மார்ச், ஏப்ரல் மாத வாக்கில் வெளியிடப்படுகிறது. கடற்படை வேலைவாய்ப்புத் தகவல்களை வெளியிட்டு வரும் www.nausena-bharti.nic.in என்ற இணையதளத்திலும் அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.

கிராமப்புற மாணவர்களுக்கான வரப்பிரசாதம்!


நன்றி: கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

மருத்துவத்துக்கு இணையான படிப்புகளை கடந்த இரு நாட்களாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் பி.பார்ம், பிசியோதெரபிஸ்ட், பி.ஏ.எஸ்.எல்.பி. ஆகிய பட்டப் படிப்புகளும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு கட்டணமும் மிகக் குறைவு. கற்றல் வசதி, பொருளாதாரம், குடும்பச் சூழல் காரணமாக மருத்துவப் படிப்புக்கான மதிப்பெண்கள் எடுக்க இயலாமல், அதேநேரத்தில் ஓரளவு நல்ல மதிப்பெண் எடுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கான வரப்பிரசாதம்தான் மேற்கண்ட படிப்புகள்.
பேச்சுலர் ஆஃப் பார்மசிஸ்ட் என்பது நான்கு ஆண்டு பட்டப்படிப்பு. இது மருந்து தயாரிப்பு, விநியோகம், ஆராய்ச்சி வரையிலான பாடப் பிரிவுகளை உள்ளடக்கியது. இதில் மேற்படிப்புகளாக மெடிசன்ஸ் கெமிஸ்ட்ரி, பார்மா டெக்னாலஜி, இன்டஸ்ட்ரியல் பார்மசி, பார்மாசூட்டிக்கல் ஆகியவற்றை படிக்கலாம். இதன்மூலம் ஆராய்ச்சி நிலையம், ஆய்வுக் கூடம், மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறை, மருந்து உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுதவிர, எம்.பி.ஏ. இன் பார்மா மேனேஜ்மென்ட் படிக்கலாம். இப்படிப்புகள் சென்னை, மற்றும் மதுரை அரசு கல்லூரிகளிலும், 32 தனியார் கல்லூரிகளிலும் உள்ளன. அரசு கல்லூரியில் ரூ.1200-ம், தனியார் கல்லூரியில் 28 ஆயிரமும் செலவாகும்.
பிசியோதெரபி பட்டப் படிப்பு, நான்கரை ஆண்டுகள் கொண்டது. 6 மாதம் இன்டன்ஷிப் கட்டாயம். இதில் பெண்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏனெனில் பெண்கள், பெண் பிசியோதெரபிஸ்ட் மூலமே சிகிச்சை பெற விரும்புவர். இதிலும் மாஸ்டர் ஆஃப் பிசியோதெரபி இன் ஆர்த்தோ, ஸ்போர்ட்ஸ் நியூரோ சயின்ஸ், கார்டியோரிஸ்ட், ரெஸ்பெரடரிஸ் சயின்ஸ், பீடியாட்ரிக்ஸ் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. தமிழகத்தில் இரு அரசுக் கல்லூரிகளிலும், 22 தனியார் கல்லூரிகளிலும் இந்தப் பாடப் பிரிவு உள்ளது. பிசியோதெரபி படிக்க விரும்புபவர்கள், கவுன்சலிங் செல்லும்போது, மருத்துவமனை சார்ந்த கல்லூரிக்கு முக்கியத்துவம் அளிப்பது நலம்.
பேச்சுலர் ஆஃப் ஆடியாலஜி ஸ்பீச் லேங்குவேஜ் பெத்தாலஜி (பி.ஏ.எஸ்.எல்.பி.) என்பது ஐந்தாண்டு பட்டப் படிப்பு. இதில் ஒரு ஆண்டு இன்டன்ஷிப் கட்டாயம். சென்னை மருத்துவக் கல்லூரியில் மட்டுமே இது இருப்பதால் இதற்கு கடும் போட்டி நிலவுகிறது.
திக்குவாய், குரல் சீரமைப்பு மற்றும் பேச்சுத் திறன் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்த படிப்பு இது. இதற்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அமோக வேலைவாய்ப்பு உள்ளது.




ஸ்கேனிங் முதல் புற்றுநோய் தெரபி வரை!


பாரா மெடிக்கல் பி.எஸ்.சி. ரேடியாலாஜி அண்டு இமேஜிங் டெக்னாலஜி படிப்பில் மூன்று ஆண்டு பட்டப் படிப்பும், ஆறு மாதம் இன்டன்ஷிப்பும் கட்டாயம். இது சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று அரசுக் கல்லூரிகளில் உள்ளது. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் படிக்கலாம்.
அரசுக் கல்லூரிகளில் பாரா மெடிக்கல் கவுன்சலிங் மூலம் சேர்க்கை நடக்கிறது. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்புவோர் இதற்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
மனிதனை உச்சி முதல் உள்ளங்கால் வரை பரிசோதனை செய்ய நவீன மருத்துவக் கருவிகள் ஏராளமாக வந்துவிட்டன. அவற்றைப் பற்றிய படிப்பு இது. இத்துறை மேன்மேலும் வளர்ந்து வருவதால் இதை முடிப்பவர்களுக்கு பெரும் வரவேற்பு காத்திருக்கிறது. சுய தொழிலில் விருப்பம் உள்ளவர்கள் ஸ்கேன் நிலையம் அமைக்கலாம்.
பி.எஸ்.சி. ரேடியோ டெக்னாலஜி தெரபிக்கு மூன்று ஆண்டு பட்டப் படிப்புடன் ஆறு மாதம் இன்டன்ஷிப் கட்டாயம். சென்னை மருத்துவக் கல்லூரியில் மட்டுமே இப்பாடப் பிரிவு உள்ளது. ஆண்டு கல்விக் கட்டணம் ரூ.1200 மட்டுமே. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் படிக்க ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். புற்றுநோயாளிகளுக்கு ரேடியோ தெரபி அளிப்பது தொடர்பான பட்டப்படிப்பு இது. புற்றுநோய் சிறப்பு மருத்துவமனைகள் பெருகி வருவதால், இதைப் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு தாராளமாகக் கிடைக்கும்.
பேச்சுலர் ஆஃப் ஆக்குபேஷனல் தெரபிக்கு நான்கு ஆண்டு பட்டப் படிப்புடன் ஆறு மாதம் இன்டன்ஷிப் கட்டாயம். இந்த பட்டப் படிப்பு அரசுக் கல்லூரிகளில் இல்லை. தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.28 ஆயிரம் வரை செலவாகிறது. மூளை மற்றும் உடல் திறன் குறைபாடு உள்ளவர்களைப் பராமரித்து, அவர்களது செயல் மற்றும் சிந்தனைத் திறனை மேம்படுத்துதல் தொடர்பான பட்டப் படிப்பு இது.
பி.எஸ்.சி., ஆப்தோமெட்ரி நான்கு ஆண்டு பட்டப் படிப்பு. கண் மருத்துவர்களுக்கு உதவியாளராக பணிபுரியலாம். கண் கண்ணாடி கடை வைக்க விரும்புவோரும் படிக்கலாம். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் சில பிரபல தனியார் கண் மருத்துவமனை நிறுவனங்களில் இப்படிப்பு உள்ளது. கண் கண்ணாடி துறை வளர்ச்சி அடைந்து வருவதால் இப்படிப்பை முடித்தவர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு நிச்சயம்.

நன்றி:கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

வேலைக்கு உத்தரவாதம் தரும் வேளாண் படிப்புகள்

மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக வேளாண்மை பட்டப் படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 8 சதவீத விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆனால் மக்கள்தொகைப் பெருக்கம், விளைநிலம் பற்றாகுறை போன்ற காரணங்களால் விளைபொருட்களின் தேவை அதிகரித்தே வருகிறது. இதனால், வேளாண் துறையில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களைக் கொண்டுவருவது அவசியமாகிறது.
தமிழகத்தில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 4, மதுரையில் 2, திருச்சியில் 3, கிள்ளிகுளம், பெரியகுளம், மேட்டுப்பாளையத்தில் தலா ஒன்று என மொத்தம் 12 வேளாண்மைக் கல்லூரிகள் உள்ளன. இவை தவிர, தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் 4 உள்ளன. வேளாண்மை பட்டப் படிப்பில் பி.எஸ்சி.யில் 6, பி.டெக்.கில் 7 பாடப் பிரிவுகள் என 13 பாடப் பிரிவுகள் உள்ளன. இவை அனைத்துக்கும் ஒரே விண்ணப்பம்தான். கவுன்சலிங் மூலம் தகுதியான பாடப் பிரிவு கிடைக்கும்.
பி.எஸ்சி. தேர்வு செய்பவர்கள் பிளஸ் 2-வில் உயிரியலும், பி.டெக். தேர்வு செய்பவர்கள் கணிதம், கம்ப்யூட்டர் சயின்சும் படித்திருக்க வேண்டும். வேளாண்மைப் பாடப் பிரிவுகளைப் பொருத்தவரை பி.எஸ்சி. வேளாண்மைக்கு அரசுக் கல்லூரிகளில் 420 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 229 இடங்களும் உள்ளன. இதர வேளாண்மைப் பாடப் பிரிவுகளுக்கு அரசு, தனியார் கல்லூரிகளில் 615 இடங்கள் உள்ளன. குறைந்த இடங்கள் என்பதால் கடும் போட்டி நிலவுகிறது. அதற்கேற்ப வேலைவாய்ப்புகளும் இத்துறையில் கொட்டிக் கிடக்கின்றன. வேளாண்மை படிக்க கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் தலா 50 சதவீத மதிப்பெண்களைக் கொண்டு, மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு கட்-ஆஃப் வருகிறது. எனவே, இந்த நான்கு பாடத்திலும் நல்ல மதிப்பெண் பெறுவது அவசியம். நடப்பாண்டு வேளாண்மை பட்டப் படிப்புக்கு கட்-ஆஃப் மதிப்பெண்கள் ஓ.சி.க்கு 192.5, பி.சி.க்கு 186.5, எம்.பி.சி.க்கு 187.25, எஸ்.சி.க்கு - 175.50 என இருந்தன.
மண் வளம், விதை உற்பத்தி, விவசாய விளைபொருட்கள் பெருக்கம், விளைநிலங்களை மேம்படுத்துதல் போன்ற பாடங்கள் இதில் கற்பிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு வங்கியிலும் வேளாண்மை அதிகாரிப் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வேளாண்மை பட்டப் படிப்பு படித்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் நன்கு ஜொலித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேறுகிறார்கள். எனவே, வேளாண்மை பட்டப் படிப்பு சிறந்த எதிர்காலத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

பயமின்றி படிக்கலாம் வனப் படிப்பு


பி.எஸ்சி., ஆர்ட்டிகல்ச்சர் (தோட்டக்கலை) பட்டப் படிப்பிற்கான, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பெரியகுளம் மற்றும் திருச்சியில் உள்ளது. திருச்சியில் இருப்பது பெண்கள் கல்லூரி. காய்கறி, பழங்கள், பூக்கள் மற்றும் சில பணப் பயிர்கள் உற்பத்தி, மண் வளம், தொழில்நுட்பம், அவை தொடர்பான ஆராய்ச்சி போன்றவை இதில் கற்பிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பூக்கள் அதிகளவு ஏற்றுமதி ஆகின்றன. இப்போது எல்லா விழாக்களிலும் பொக்கே கொடுப்பது வழக்கமாகிவிட்டது. பூ அலங்காரத் தொழிலும் வளர்ந்துவருகிறது. தோட்டக்கலை படிப்பவர்கள் சொந்தமாக அலங்காரப் பூக்கள் மற்றும் காய்கறி உற்பத்தி செய்யலாம். நர்சரி கார்டன் வைக்கலாம். பொக்கே தொழிலும் செய்யலாம்.
இந்தப் படிப்பை முடிப்பவர்களுக்கு அரசு தோட்டக் கலைத்துறை, வேளாண்மைத் துறையிலும் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம், கனடா நாட்டின் டல்ஹவுசி பல்கலைக்கழகத்துடன் செய்துள்ள கூட்டு ஒப்பந்தத்தின்படி, தோட்டக்கலை படிப்பவர்கள் இரட்டைப் பட்டப் படிப்பு படிக்க முடியும். தோட்டக்கலை படித்துக் கொண்டிருக்கும்போதே, பட்டமேற்படிப்பு படிக்க கல்லூரியே வசதி செய்து கொடுக்கிறது.
பி.எஸ்சி., பாரஸ்ட்ரி படிக்க மேட்டுப்பாளையத்தில் வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மட்டுமே உள்ளது. அதிலும் 45 இடங்கள்தான். வனம் சார்ந்த படிப்பு என்பதால் ஆரம்பத்தில் பெண்கள் தயக்கம் காட்டினர். தற்போது, பெண்களும் ஆர்வமுடன் படிக்கின்றனர்.
இந்தப் படிப்பை படித்தால், காட்டுக்குள் பணியாற்ற வேண்டும் என்ற அச்ச உணர்வு பலரிடம் உள்ளது. பாதுகாப்பு அம்சங்கள் நிறைய இருப்பதால் பயம் தேவையில்லை. வனங்கள், வன விலங்குகள் வாழ்வியல் முறை, சுற்றுச்சூழல், பல்லுயிரியம் தொடர்பான வெகு சுவாரஸ்யமான படிப்பு இது.
இதைப் படிப்பவர்கள் வனத்துறையின் உயர் பதவிகளுக்கு செல்லலாம். இதில் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்பவர்களுக்கு வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. தவிர, எஸ்டேட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பணி வாய்ப்பும் உள்ளது.
வேளாண்மைப் படிப்பில் பி.எஸ்சி., ஹோம் சயின்ஸ் பட்டப் படிப்பு இருக்கிறது. இதில் இன்டீரியர் டெக்ரேஷன், ஃபேஷன் டிசைனிங், நியூட்ரீஷன் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் உள்ளன. இதைப் படிப்பவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள கர்னல் யுனிவர்சிட்டியில் பட்ட மேற்படிப்பு பயில கல்லூரிகளே வாய்ப்பு ஏற்படுத்தித் தருகின்றன.
இவர்களும் இரட்டை பட்டப் படிப்பு படிக்கலாம். பி.எஸ்சி., ஹோம் சயின்ஸ் படிப்பவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த வேலைவாய்ப்பு கிடைக்கிறது. மருத்துவமனை மற்றும் ஹோட்டல்களில் நியூட்ரீஷனாகவும், இன்டீரியர் டெக்ரேஷனராகவும் ஆகலாம். ஆடை வடிவமைப்பு நிறுவனங்களிலும் பணியாற்றலாம்.

வளமான எதிர்காலம் தரும் உணவு, தோட்டக்கலை படிப்புகள்


வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக பிளஸ் 2 வகுப்பில் கணிதம் எடுத்திருக்க வேண்டும். பி.டெக். அக்ரி இன்ஜினியரிங் பட்டப்படிப்பு குமுலூர் வேளாண் கல்லூரியில் உள்ளது. இங்கு மொத்தம் 90 இடங்கள் உள்ளன. விவசாயத்துக்குத் தேவைப்படும் அனைத்துவித உபகரணங்கள், தொழில்நுட்பக் கருவிகள் சம்பந்தமான பாடப்பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன. நவீன உபகரணங்கள் தயாரிப்பு, மரபுசாரா எரிசக்தி, மண்வளம், நீர்வள மேம்பாடு தொழில்நுட்பம், நுண்ணிய பாசனம் ஆகியவற்றை முக்கியப் பாடங்களாக உள்ளடக்கியுள்ளது.
விவசாயத்தை மேம்படுத்துவதில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பாடப்பிரிவாக உள்ளதால், இதைப் படிப்பவர்கள் நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளலாம். கனடாவில் உள்ள டல்ஹவுசி பல்கலைக்கழகம் மூலம் இரட்டை பட்டப்படிப்பு படிக்க முடியும். எரிசக்தி துறை, விவசாய உபகரணத் தயாரிப்பு ஆலைகள், நீர்வளம் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. இது ஒரு வித்தியாசமான படிப்பு முறையாகும்.
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக். பயோடெக்னாலஜி உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு முதல் இப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 55 இடங்கள் உள்ளன. இதைப் படிக்க விரும்புபவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். விவசாயம் சார்ந்த மரபணு அறிவியல், பிளான்ட் அண்ட் அனிமல் பயோ டெக்னாலஜி, டிஷ்யூசல்ச்சர் ஜெனடிக் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகள் இதில் உள்ளன. மரபணு மாற்ற முறையில் வீரியச் செடிகளை உருவாக்குவது சம்பந்தமாக கற்பிக்கப்படுகிறது. வெறும் பட்டப்படிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல், எம்.டெக்., பி.எச்.டி. வரை படிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இது ஒரு ஆராய்ச்சி படிப்பு முறை என்பதால், ஆர்வத்துடன் படித்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
பி.டெக். ஆர்டிகல்ச்சர் (தோட்டக்கலை) பட்டப்படிப்பு படிப்பவர்கள் சுயதொழில் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. காய்கறி, பழ வகைகள், பூக்கள் குறித்த பாடப்பிரிவுகள் இதில் உள்ளன. தோட்டம் அமைத்து, அதில் காய்கறி, பழம், பூக்களை எவ்வாறு உற்பத்தி செய்து, தொழில் தொடங்கி மேன்மை அடையலாம் என தெரிந்துகொள்ளக் கூடிய வகையில் இந்த பட்டப்படிப்பு அமைந்துள்ளது. கோவை வேளாண்மை பல்கழைக்கழகத்தில் 30 இடங்கள் உள்ளன. இந்த பட்டப்படிப்பு படிப்பவர்களும் இரட்டை பட்டப்படிப்பு படிக்கலாம்.
பி.டெக். ஃபுட் பிராசசிங் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு உணவு மேம்படுத்தல் சம்பந்தமான பாடப்பிரிவைக் கொண்டுள்ளது. உணவுப் பொருட்களான காய்கறி, பழ வகைகளை விளைவிக்கும் முறை, உணவுப் பொருட்கள் குறித்த சகலவிதமான பாடப்பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. இதற்கு 55 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பட்டப்படிப்பை முடித்தவர்கள் பால் பண்ணை, ரோலர் ஃபிளவர் மில் என உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்திலும் பணியாற்ற வாய்ப்பு உள்ளது. மேலும், சுயமாக தொழில் தொடங்கவும் முடியும் என்பதால், தாராளமாக பிடெக். ஃபுட் பிராசசிங் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை எடுத்துப் படிக்கலாம்.
கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி