Sunday, September 22, 2013

எளிதான வெளிநாட்டுக் கல்வி!

இந்தியாவிலிருந்து சில மணி நேரங்களில் அடைந்துவிடக்கூடிய ஒரு இடமான சிங்கப்பூர், பலவித காரணங்களுக்காக இந்திய மாணவர்களைக் கவரும் இடமாக உள்ளது. க்யூ.எஸ் போன்ற சர்வதேச அளவிலான சர்வேக்களில், உலகளவில் சிறந்த பல்கலைகளில், முதல் 20 இடங்களுக்குள் சிங்கப்பூர் பல்கலைகள் வருகின்றன. ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கு, சிங்கப்பூர் பல்கலைகள் பெயர்பெற்று விளங்குகின்றன.
சர்வதேச மாணவர்களின் பாதுகாப்பிற்கு சிறப்பான உத்தரவாதம் கிடைக்கும் இந்நாட்டில், பல நாடுகளை ஒப்பிடும்போது, கல்விக் கட்டணமும் குறைவே. அதேசமயம், தரமான கல்வியும் உண்டு. வெளிநாடு சென்று படிக்க விரும்பும் ஒருவர், அமெரிக்கா அல்லது பிரிட்டன் நாடுகளுக்கு செல்வதற்கு ஆகும் பயண செலவை விட, சிங்கப்பூர் செல்வதற்கு ஆகும் செலவு மிக மிக குறைவு.
சர்வதேச அறிவுக் கூடல்
சிங்கப்பூரில், INSEAD, SP Jain Centre of Management and SIM university போன்ற வெளிநாட்டுப் பல்கலைகளின் செயற்கைக்கோள் வளாகங்களும் உண்டு. வலுவான சர்வதேச தொடர்பை இந்நாடு பெற்றுள்ளதால், உலகளவிலான பல பல்கலைகளின் ஒருங்கிணைப்பை பெற முடிகிறது. Massachusetts institute of technology, US and Zhejiang university(China), MIT, Washington university, Carnegie Mellon university, Yale Stanford போன்ற பல பல்கலைகளுடன் ஒத்துழைப்புகள் உள்ளன.
படிப்புகள் மற்றும் செலவினங்கள்
இந்திய மாணவர்கள் பொதுவாக, பொறியியல், மேலாண்மை, ஐடி மற்றும் சுற்றுலாத் தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள சிங்கப்பூர் வருகின்றனர். இளநிலைப் படிப்புகளுக்கு, வருடத்திற்கு, சராசரியாக, 25,000 முதல் 30,000 சிங்கப்பூர் டாலர்கள் வரை செலவாகின்றன. அதேசமயம், தகுதிவாய்ந்த(Meritorious) மாணவர்களுக்கு, வருடத்திற்கு 11,000 சிங்கப்பூர் டாலர்கள் வரை உதவித்தொகை கிடைக்கிறது.
தோராயமாக, ஒரு மாதத்திற்கான தங்குமிட செலவினம் 700 முதல் 900 சிங்கப்பூர் டாலர் வரை செலவாகிறது. இளநிலைப் பட்டப் படிப்புகள் 3 வருடங்களும், முதுநிலைப் படிப்புகள் 2 வருடங்களும் கொண்டவை. அதேசமயம், இரட்டைப் பட்டப் படிப்புகள், 4 முதல் 5 வருடங்கள் வரை ஆகும்.
உதவித் தொகைகள்
National university of Singapore(NUS), Nanyang technological university(NTU), Management university(SMU) போன்ற சிங்கப்பூர் பல்கலைகள், வெளிநாட்டு மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டங்களை வழங்குகின்றன.
விசா விதிமுறைகள்
பல்கலையிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு, மாணவர் அனுமதி சீட்டிற்காக(Student pass), Immigration and Check points Authority -ஐ அணுகவும்.
உங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டவுடன், ஏற்பு(acceptance) விண்ணப்பம் மற்றும் மாணவர் அனுமதி சீட்டு விண்ணப்பம் ஆகியவற்றை நிறைவுசெய்து, அவற்றை பல்கலையில் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
உங்களின் ஏற்பு விண்ணப்பம் மற்றும் மாணவர் அனுமதி சீட்டு விண்ணப்பம் ஆகியவை ஏற்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட பல்கலையானது, சிங்கப்பூர் குடியேற்ற மற்றும் சோதனை அத்தாரிடியிடமிருந்து(ICA), மாணவர் அனுமதி சீட்டிற்கு விண்ணப்பிக்கும்.
அந்த அனுமதியை ICA -இடமிருந்து பெற்ற பின்னர், அதற்கான கடிதத்தை, அந்தப் பல்கலை அல்லது கல்வி நிறுவனம், உங்களுக்கு அனுப்பும்.

வெளிநாட்டு கல்விக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

உலகமயமாதல் யுகத்தில் வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் சென்று படிப்பது சாதாரணமாகிவிட்ட நிலையில், எந்த நாட்டில் படிக்க, எப்போது விண்ணப்ப மற்றும் விசா செயல்பாட்டை தொடங்க வேண்டும் என்பதை அறிதல் முக்கியம்.
எனவே, இந்திய மாணவர்கள் அதிகம் செல்லக்கூடிய, சில முக்கிய நாடுகளில், எந்தெந்த காலகட்டங்களில், விண்ணப்பம், விசா செயல்பாடுகள் மற்றும் வகுப்புகள் தொடங்குகின்றன என்பதன் சுருக்கமான விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
அமெரிக்கா
12 முதல் 18 மாதங்களுக்கு முன்னதாகவே விண்ணப்ப செயல்பாடு தொடங்கி விடுகிறது. ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
பிப்ரவரி இறுதியில், விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.
மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைபட்ட காலகட்டத்தில், நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களா அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளீர்களா என்பதை குறிப்பிட்ட பல்கலைக்கழகம் அறிவிக்கும்.
விசா சுழற்சி - I - 20 ன் தொடக்கத் தேதியிலிருந்து 120 நாளுக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். I - 20 ன் தொடக்கத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பயணத்தை தொடங்கலாம்.
வகுப்புகள் தொடக்கம் - செப்டம்பர் அல்லது அக்டோபரில் வகுப்புகள் தொடங்கும்.
பிரிட்டன்
படிப்பில் சேர்வதற்கு முந்தைய ஆண்டின் அக்டோபரில் விண்ணப்ப செயல்பாடு தொடங்கும்.
பொதுவாக மார்ச் மாதத்திலேயே விண்ணப்ப செயல்பாடு முடிந்துவிட்டாலும், வெளிநாட்டு மாணவர்களுக்கு ஜுன் வரை நீட்டிப்பு வழங்கப்படும்.
விசா சுழற்சி - செமஸ்டர் துவங்குவதற்கு 3 மாதங்கள் முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிப்பது சிறந்தது.
செப்டம்பர் அல்லது அக்டோபரில் வகுப்புகள் தொடங்கும்.
ஆஸ்திரேலியா
பிப்ரவரியில் தொடங்கும் விண்ணப்ப செயல்பாடு, டிசம்பரில் முடிவடையும்.
நவம்பர் தொடங்கி, ஜனவரி மாதத்திற்குள், நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்களா அல்லது இல்லையா என்பதை கல்வி நிறுவனங்கள் அறிவித்துவிடும்.
விசா செயல்பாடு அக்டோபரில் துவங்கி, டிசம்பர் அல்லது ஜனவரியில் முடிந்துவிடும்.
பொதுவாக, பிப்ரவரியில் வகுப்புகள் தொடங்கினாலும், பல்கலையைப் பொறுத்து, வேறுபாடு இருக்கலாம். மேலும், சில பல்கலைகள், செப்டம்பர் மாதத்தில், இடை சேர்க்கையையும் நடத்துகின்றன.
ஜப்பான்
படிப்பு தொடங்குவதற்கு 7 அல்லது 8 மாதங்களுக்கு முன்னதாகவே விண்ணப்ப செயல்பாடு தொடங்கி விடுகிறது.
செமஸ்டர் தொடங்குவதற்கு ஏறக்குறைய 4 மாதங்களுக்கு முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஜனவரி, ஏப்ரல், ஜுலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் வகுப்புகள் தொடங்குகின்றன.
பிரான்ஸ்
பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் விண்ணப்ப செயல்பாடு தொடங்குகிறது.
ஜுன் மாதத்திற்கு முன்னதாக, விண்ணப்ப செயல்பாட்டை முடித்துவிட வேண்டும்.
செமஸ்டர் தொடங்குவதற்கு 3 மாதங்கள் முன்னதாகவே, விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கும்.
ரஷ்யா
செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கும்.
முதல் செமஸ்டர் - செப்டம்பர் முதல் ஜனவரி வரை
இரண்டாம் செமஸ்டர் - பிப்ரவரி முதல் ஜுன் வரை.
ஜெர்மனி
கோடைகால செமஸ்டருக்கு, ஜனவரி 15ம் தேதிக்குள்ளும், குளிர்கால செமஸ்டராக இருந்தால், ஜுலை 15ம் தேதிக்குள்ளும் விண்ப்ப செயல்பாடுகள் முடிந்துவிடும்.
விமானம் ஏறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே, விசாவிற்கு விண்ணப்பித்துவிட வேண்டும்.
குளிர்கால செமஸ்டர் அக்டோபர் மாதத்திலும், கோடைகால செமஸ்டர் ஏப்ரல் மாதத்திலும் தொடங்குகின்றன.
சிங்கப்பூர்
மார்ச் மாதத்திலேயே விண்ணப்ப செயல்பாடுகள் முடிந்துவிடுகின்றன.
குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு முன்னதாக விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், 6 மாதங்களுக்கு முன்பாக விண்ணப்பிக்கக் கூடாது.
ஆகஸ்ட் மாதம் வகுப்புகள் தொடங்கும்.
கனடா
மாணவர் சேர்க்கைக்கு முன்னதாக, 15 முதல் 18 மாதங்களுக்கு முன்பாகவே, விண்ணப்ப செயல்பாடுகள் தொடங்கி விடுகின்றன.
செமஸ்டர் தொடங்குவதற்கு 2 மாதங்கள் முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பரில் வகுப்புகள் தொடங்குகின்றன. மேலும், குளிர்கால வகுப்புகள், அவ்வப்போது, இரண்டாக பிரிக்கப்படுகின்றன. அதாவது, செப்டம்பர் முதல் டிசம்பர் வரை ஒன்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஒன்றுமாக நடைபெறுகிறது.
அயர்லாந்து
வகுப்புகள் தொடங்குவதற்கு 4 மாதங்கள் முன்னதாகவே, விண்ணப்ப செயல்பாடுகளை முடித்துவிட வேண்டும்.
புறப்படுவதற்கு 8 முதல் 10 வாரங்களுக்கு முன்னதாகவே விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பர் மாதம் வகுப்புகள் தொடங்குகின்றன. சில சமயங்களில் பிப்ரவரி மாதமும் தொடங்கும்.
நியூசிலாந்து
வகுப்புகள் தொடங்குவதற்கு 4 மாதங்கள் முன்னதாவே, விண்ணப்ப செயல்பாடுகளை முடித்துவிட வேண்டும்.
படிப்பு தொடங்குவதற்கு 8 முதல் 10 மாதங்களுக்கு முன்னதாகவே, விசாவிற்கு விண்ணப்பித்தல் நன்று.
செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வகுப்புகள் தொடங்குகின்றன.

திட்டமிட்டால் எளிதாகும் வெளிநாட்டுக் கல்வி



வெளிநாடு சென்று படிக்க விருப்பமுள்ளவரா நீங்கள்.. ஆம் என்றால், நீங்கள் படிக்கும் கல்லூரியை, திட்டமிட்டு தேர்வு செய்ய வேண்டியது அவசியம். இந்திய மாணவர்களின் வெளிநாட்டு கல்வி மோகம் அதிகரித்து வருகிறது.

டிகிரி அல்லது டிப்ளமோவை வெளிநாட்டில் முடித்து விட்டு, பயோடேட்டாவில் அதை இடம் பெறச் செய்து, நல்ல வேலையில் சேர்ந்து செட்டில் ஆவதில் உள்ள ஆர்வமே, இதற்கு காரணம்.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து போன்ற நாடுகளிலுள்ள கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு பல சலுகைகளுடன்,கல்வியை வழங்குகின்றன. தேர்ந்தெடுக்கும் கல்வி நிறுவனம், நம் விருப்பப் பாடத்தில் சிறந்த கல்வி
நிறுவனமா என்பதை அறிந்த பின் சேர்வது நல்லது.
எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
எந்த பாடத்தில் ஆர்வம் அதிகமோ, அந்தப் பாடத்தையே தேர்வு செய்ய வேண்டும். ஒரு பாடத்தை, நியூ டிரென்ட் அல்லது தெரிந்தவர் படிப்பதாலோ, தேர்வு செய்வது தவறு. விருப்பம் இல்லாத பாடத்தை 3 அல்லது 5 ஆண்டுகள் படித்து விட்டு, அத்துறையில் வளர்வதும், அதிக சம்பளம் பெறுவதும் இயலாத காரியம். விருப்பப் பாடமாக இருந்தால், முன்னேற்றத்திற்கான வழியை அறிவீர்கள். எதிர் காலத்தில் சொந்த தொழில் தொடங்கவும் அது வழி செய்யும்.
நாடுகளும், பிரபலமான பாடங்களும்
வணிக மேலாண்மை, ஐ.டி., போன்ற படிப்புகள், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும், பி.இ., மற்றும் சயின்ஸ், ஜெர்மனியிலும், ஏரோநாட்டிகல், மருத்துவம், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிலும், அக்கவுன்ட்ஸ், பைனான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும், டிராவல், ஹாஸ்பிடாலிட்டி, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரிலும், பேஷன் டிசைன், பிரான்ஸ் மற்றும் இத்தாலியிலும் சிறந்து விளங்குகின்றன.

என்ன செய்ய வேண்டும்?
கல்வி உதவித்தொகை, நிதி உதவி, பெல்லோஷிப் மற்றும் வேறு சலுகைகள் உள்ளதா, கல்விக்கு முக்கியத்துவம், அட்வான்ஸ்டு லெவல் பாடத் திட்டம் உள்ளதா, பகுதி நேர வேலைக்கு வாய்ப்பு உள்ளதா என ஆராய வேண்டும். நாம் செல்லும் நாடு, தூதரகங்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பது முக்கியம்.
நாடுகளைப் பற்றிய தகவல்களுக்கு
நீங்கள் தேர்வு செய்வது அமெரிக்கா எனில், அதைப்பற்றிய தகவல்களை யு.எஸ்.இ.எப்,ஐ., (யு.எஸ்., எஜூகேஷன் இன் இந்தியா) மற்றும் www.usief.org.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளளாம்.
இங்கிலாந்து: www.britishcouncil.org/india.html மற்றும் www.ucas.com
ஆஸ்திரேலியா: www.studyinaustralia.gov.au
நியூசிலாந்து: www.studyingnewzealand.com
சிங்கப்பூர்: www.singaporeedu.gov.sg
அயர்லாந்து: www.educationireland.ie
பிரான்ஸ்: www.edufrance.in
ஜெர்மனி: www.daad.de/deutschland/index.en என்ற இணையதளங்களில் இருந்து தகவல்களைப் பெறலாம்.
தேர்வுகள்
முன்பே திட்டமிட்டு, ஜி.ஆர்.இ., ஜி.மேட்., டி.ஓ.இ.எப்.எல்., ஐ.இ.எல்.டி.எஸ்., டி.ஓ.இ.ஐ.சி., எம்.கேட்., எல்.சேட்., போன்ற தேர்வுகளுக்கு தயாராகி, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும். குறைந்தபட்சம் 8 முதல் 12 மாதங்களாவது தயாராவது அவசியம்.